Last Updated:
இந்திய உள்துறை அமைச்சகம் மே 7ஆம் தேதி நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை நடத்த உத்தரவிட்டுள்ளது. மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுதல் உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தப்படும்.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பஹல்காமில், கடந்த 22ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத தருணத்தில், பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நிகழ்த்தியதில், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க பிரதமரும், உயர் அதிகாரிகளும் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நேற்று (4ஆம் தேதி) பிரதமர் மோடி, விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக விமானப்படை தளபதியுடன் மோடி ஆலோசித்ததாக தகவல் வெளியாகியது. இப்படி தொடர்ந்து பிரதமர் மோடி சந்திப்புகள் நிகழ்த்திவரும் வரிசையில் இன்று, (5ஆம் தேதி) மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்குடன் சந்திப்பு நிகழ்ந்தது.
இந்நிலையில், மே 7ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், நாளை மறுநாள் முதல் மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அவசர காலத்தில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தான ஒத்திகை நடத்தவும், எதிரிகள் தாக்குதலின் போது மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள ஒத்திகை நடத்துக என உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வான்வெளி தாக்குதல் குறித்த சைரன் ஒலிகளை எழுப்பி ஒத்திகை நடத்த வேண்டும். எதிரிகள் தாக்கும்போது, பாதுகாப்பாக இருப்பது எப்படி என பொதுமக்கள், மாணவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். விபத்து தடுப்பு நடவடிக்கைகளை வழங்கவேண்டும். வெளியேற்றம் திட்டத்திற்கான ஒத்திகையும் செய்ய வேண்டும்.


