Last Updated:
நியூசிலாந்து உடனான தொடரில் தோல்வி, பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் தோல்வி என அடுத்தடுத்த தொடரில் இந்தியா தோல்வியடைந்தது.
இங்கிலாந்து தொடருக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை மறுபரிசீலிக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து தொடருக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் சூழலில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா தனது ஓய்வை அறிவித்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவார் என தகவல் வெளியானது.
நியூசிலாந்து உடனான தொடரில் தோல்வி, பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் தோல்வி என அடுத்தடுத்த தொடரில் தோல்வியடைந்ததால், இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட முடியவில்லை. இதனால் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மீதும், விராட் கோலியின் மீதும் விமர்சனங்கள் எழுந்தது.
இதையடுத்து தான் ரோகித் சர்மா ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் பிசிசிஐ-யிடம் தான் ஓய்வு பெறும் முடிவில் இருப்பதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கோலியை சமாதானப்படுத்த பிசிசிஐ தரப்பில் முக்கிய நபர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்பட்டது. ஆனால் யார் விராட் கோலியுடன் பேசுவார் என தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், அஜித் அகர்கர் விராட் கோலியிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அகர்கர் பேசிய பிறகும், விராட் கோலி அவரின் முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்து உடனான தொடரில் விராட் கோலி இடம்பெறுவது சந்தேகமாகியுள்ளது. இதனால் மூத்த வீரர்கள் அதிகம் இல்லாமல் இளம் படையுடன் இங்கிலாந்து செல்லும் நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தொடரில் ஷுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. வரும்காலத்தில் அணியை எப்படி வழிநடத்துவது என்பது குறித்து ஷுப்மன் கில் அஜித் அகர்கரை சந்தித்து இன்று பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்.
இதுவரை அணிகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது. இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்று அடுத்த வாரம் பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். ஒருவேளை விராட் கோலி இல்லாதபட்சத்தில், அவரது இடத்தில் ஸ்ரேயஸ் ஐயர் இடம்பெற வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது. மேலும் சர்ப்ராஸ் கானின் இடத்தில் ரஜத் படிதார் விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.


