Last Updated:
டெல்லியில் விலங்கு நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை காவல் அதிகாரி தாக்கிய வீடியோ வைரலாகிவருகிறது.
டெல்லியில் இருக்கும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் கடந்த 11ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் நிலவிவருகின்றன. விலங்கு நல ஆர்வலர்கள் பலரும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
அந்த வகையில், டெல்லி இந்தியா கேட் அருகே இன்று விலங்கு நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் ஏற்றினர். பேருந்தில் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கும் டெல்லி காவல்துறை பெண் அதிகாரிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, டெல்லி பெண் காவல்துறை அதிகாரி, கைது செய்யப்பட்ட பெண்ணை பிடித்து தள்ளினார். பின்னர், அவரது கன்னத்தில் அறைந்த அந்த பெண் போலீஸ் அதிகாரி, தொடர்ந்து அந்தப் பெண்ணை கொடூரமாக தாக்கினார். இதன் காரணமாக கைது செய்யப்பட்ட பெண்ணும், காவல்துறை பெண் அதிகாரியை திருப்பி தாக்கினார். இதனை கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. மனிஷ் திவாரி, “அமைதியான போராட்டங்கள் இவ்வளவு சர்வாதிகார முறையில் கையாளப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. டெல்லி காவல்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19, பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. போராட்டம் நடத்துவதும் அடிப்படை உரிமை” எனத் தெரிவித்துள்ளார்.
It is really unfortunate that peaceful protests are being handled in such an authoritarian manner. @DelhiPolice needs to excersize restraint and show a degree of sensitivity. The right to protest is a fundamental and Constitutional right intrinsically embedded in Article-19 -… pic.twitter.com/oNMMHSbvA0
— Manish Tewari (@ManishTewari) August 12, 2025
சமீப காலமாக தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவில் அதிகளவில் பதிவாகிவருகின்றன. இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி உச்சநீதிமன்றம், டெல்லி அரசிற்கும், குருகிராம், நொய்டா மற்றும் காஜியாபாத்தில் உள்ள நிர்வாகத்திற்கும் தெருநாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து, எட்டு வாரங்களுக்குள் நிரந்தரமாக காப்பகங்களுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
August 13, 2025 2:59 PM IST
போராடிய பெண்ணை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய டெல்லி காவல் அதிகாரி… இணையத்தில் வைரலாகும் வீடியோ


