இனி, யுபிஐ மூலமாக பணம் செலுத்தும்போது PIN நம்பரையோ அல்லது தொலைபேசியையோ எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, பயனர்கள் முகம் அல்லது கைரேகை அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி, சில வினாடிகளில் யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதன் மூலம், யுபிஐ பயன்பாடு இன்னும் வேகமானதும், பாதுகாப்பானதும், ஹேண்ட்ஸ்-ஃப்ரீயாகவும் மாறுகிறது.
இந்த புதிய வசதி மூலம், யுபிஐ பரிவர்த்தனையானது முழுமையாக யூசரின் சாதனத்திலேயே நடைபெறும். அதாவது, முகம் அல்லது கைரேகை மூலம் உறுதிப்படுத்தப்படும் தகவல்கள் வெளியில் பகிரப்படாது. இது குறித்து, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்ததாவது, “இந்த அம்சம் யூசர்களின் தனியுரிமையை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, தனிப்பட்ட மற்றும் முக்கியமான தரவுகள் எங்கும் கசிய வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளது.
அத்துடன், நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மற்றொரு புதுமையான விஷயம் என்னவென்றால், ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கான யுபிஐ லைட் அம்சமாகும். இந்த தொழில்நுட்பம், சிறிய மதிப்புள்ள பரிவர்த்தனைகளை முற்றிலும் எளிமையாகவும், ஹேண்ட்ஸ்-ஃப்ரீயாகவும் முடிக்க வழி செய்கிறது. பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் கண்ணாடியில், வாய்ஸ் மூலம் தெரிவித்தால் மட்டும் போதும். அதற்காக PIN, தொலைபேசி அல்லது வேறு எந்த சாதனத்தையும் எடுக்கத் தேவையில்லை. பரிவர்த்தனையை முடிக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்வது மட்டுமே போதுமானது.
யுபிஐ லைட் என்பது ஏற்கனவே யுபிஐ சூழலில் பிரபலமடைந்த ஒரு அம்சமாகும். இது பயனர்களை PIN அல்லது OTP இல்லாமல் சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கிறது. இதன் புதிய பதிப்பில், இது வாய்ஸ் மூலம் தெரிவித்தல் மற்றும் அணியக்கூடிய சாதனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், டீ கடை, பேருந்து கட்டணம் போன்ற சிறிய செலவுகளுக்கு மொபைலை எடுக்கத் தேவையில்லை.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) மேலும் மல்டி-சிக்னேட்டரி யுபிஐ அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், கூட்டுக் கணக்குகளை வைத்திருப்பவர்கள், ஒரே நேரத்தில் பலர் ஒப்புதல் அளித்து பணம் செலுத்தலாம். இது குடும்பங்கள் அல்லது வணிகங்கள் பகிர்ந்த கணக்குகளைப் பாதுகாப்பாகவும், தெளிவாகவும் நிர்வகிக்க உதவும்.
இந்த புதிய பயோமெட்ரிக் அங்கீகாரம், ஆதார் பயோமெட்ரிக் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே ஆதார் தரவுத் தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள கைரேகை, முகம் மற்றும் கண் (கருவிழி) தகவல்கள், பரிவர்த்தனையின்போது உறுதிப்படுத்துதலுக்காக முறையாகப் பயன்படுத்தப்படும். இதனால், PIN எண்ணை நினைவில் வைத்திருக்க வேண்டிய சிரமம் அவசியமில்லை, மாறாக பயனர்கள் நேரடியாக முகம் அல்லது கைரேகையை ஸ்கேன் செய்வதன் மூலமாக பரிவர்த்தனையை வெற்றிகரமாக முடிக்க முடியும்.
இந்த மாற்றங்கள், சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி பாரம்பரிய PIN நடைமுறைக்கு மாற்றாக புதிய வழிகளை அனுமதித்ததற்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளன. நிபுணர்கள், இதை இந்திய டிஜிட்டல் கட்டண முறைக்கான அடுத்த பெரிய படியாகக் கருதுகின்றனர்.
இவ்வாறாக, பயோமெட்ரிக் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி ஆதரவு இணைந்த பிறகு, இந்தியாவின் டிஜிட்டல் கட்டண அனுபவம் மேலும் இயல்பாகவும், பாதுகாப்பாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
October 09, 2025 5:38 PM IST
போன், பின் நம்பர் இல்லாமலே இனிமேல் யூபிஐ கட்டணம் செலுத்தலாம்…! விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி…

