
Last Updated:
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ பிரையன் நிக்கோல், தனி ஜெட், 829 கோடி ரூபாய் போனஸ் உள்ளிட்ட பல சலுகைகளை பெற்றுள்ளார். நிக்கோல் வந்த பிறகு ஸ்டார்பக்ஸ் பங்கு மதிப்பு 25% உயர்ந்துள்ளது.
போனஸ் மட்டும் 829 கோடி ரூபாய், பணிக்கு சென்று வர தனி ஜெட் விமானம் என்று தனது தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் நிக்கோல்லுக்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அளித்துள்ள சலுகைகள், பலரை பொறாமை கொள்ள வைத்துள்ளன.
காபி குடிப்பதை கூட வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் வைக்கும் அளவிற்கு, பெருமைக்குரியதாக மாற்றியதில் முக்கிய பங்கு அமெரிக்க நிறுவனமான ஸ்டார்பக்ஸிற்கு உண்டு. என்னதான் இப்படி ஆடம்பரத்துக்கு பெயர்போன நிறுவனமாக இருந்தாலும் ஒரு சிஇஓவுக்கு இவ்வளவு சலுகைகளை தருமா என்று வாய் பிளக்க வைத்துள்ளது அண்மையில் வெளியாகி உள்ள தகவல்கள். 2023 ஆம் ஆண்டு வாக்கில் பல நவீன மற்றும் புதுமையான உள்நாட்டு காஃபி பிராண்டுகள் வந்துள்ளதால் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் கிட்டத்தட்ட படுத்தே விட்ட சூழல்.
அந்த சமயம், அமெரிக்காவின் பிரபல பாஸ்ட்புட் நிறுவனமான சிபோட்லே நிறுவனத்தின் வருவாயை இரட்டிப்பாக்கி அமெரிக்காவின் சிறந்த உணவக தலைமை நிர்வாக அதிகாரியாக வலம் வந்துக் கொண்டிருந்தார் பிரையன் நிக்கோல். இதனால் ஸ்டார்பக்ஸின் பார்வை அவர் மீது விழ, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லஷ்மன் நரசிம்மன் நீக்கப்பட்டார். புதிய சிஇஓவாக பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டார்.
ஆனால், இந்த பதவியை அவ்வளவு எளிதாக, 50 வயதான நிக்கோல் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தங்கியிருப்பது கலிபோர்னியா. அலுவலகம் இருப்பது சியாட்டிலில். ஆனால், பணிக்காக தன்னால் இடம் மாற முடியாது என்று நிக்கோல் கூறிவிட்டாராம். இதற்காக கலிபோர்னியாவில் இருந்து சியாட்டிலுக்கு சுமார் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரம் சென்று வர தனி ஜெட் விமானத்தையே கொடுத்து அதற்காக 62 லட்சம் ரூபாயையும் கடந்த ஓராண்டிற்கு மட்டும் செலவழித்துள்ளது ஸ்டார்பக்ஸ் நிறுவனம்.
இதுமட்டுமின்றி, நிக்கோலின் வீட்டுச் செலவுகளுக்கு ஒரு கோடியே 23 லட்சம் ரூபாயையும் தனிப்பட்ட முறையில் ஜெட் பயன்படுத்தியதற்கான 16 லட்சம் ரூபாயை செலவையும் அந்நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது. அதிலும், நிக்கோல் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் மட்டும் அலுவலகம் சென்று வருகிறார். மற்ற நாட்களில் வீட்டில் இருந்தே பணியாற்றுகிறார். ஒப்பந்தத்தின்படி, சிபோட்லே நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு வந்ததற்காக மட்டும் ஒரே மாதத்தில் 43 கோடி ரூபாயை சைன்-ஆன் போனஸாக வழங்கியது.
இவ்வளவு செலவு செய்ததும் வீணாகி விடவில்லை என்பதற்கு சான்றாய், நிக்கோல் வந்ததற்கு பிறகு ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் 25 சதவீதம் அதிகரித்து சந்தை மதிப்பில் ஒரு லட்சத்து 84 கோடி ரூபாயாக உயர்ந்து. இந்த ஜாக்பாட்டால் உற்சாகமடைந்த அந்த நிறுவனம் பிரையன் நிக்கோல் பணியில் சேர்ந்த 4 மாதத்தில் 829 கோடி ரூபாயை ஊக்க தொகையாக வழங்கி உள்ளது.
Also Read | Gold Rate: தொடர் சரிவில் தங்கம் விலை..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?
இதில், சுமார் 94 சதவீதம், தங்கள் பங்கு மதிப்புகள் உயர்ந்ததில் இருந்து நிக்கோலுக்கு கிடைத்த ஊக்கத் தொகை என்று ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது ஆண்டு வரவு செலவு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி நிக்கோலின் மொத்த ஆண்டு வருமானம் தோராயமாக 976 கோடி ரூபாயாக கூறப்படுகிறது. இதன்மூலம், உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 20 தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக அவர் இடம் பிடித்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 28, 2025 11:10 AM IST

