International
oi-Nantha Kumar R
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்னாக வலம் வந்த டேவிட் வார்னர் குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கினார். இதில் அவரை குற்றவாளி என நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில் தற்போது ரூ.1.01 லட்சம் அபராதம் விதித்து அதிரடியாக உத்தவிட்டுள்ளது. அதோடு, டேவிட் வார்னர் அடுத்த 12 மாதங்கள் தனது காரில் ‘ஆல்கஹால் இன்டர்லாக் சிஸ்டம்’ பொருத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ‘ஆல்கஹால் இன்டர்லாக் சிஸ்டம்’ என்பது என்ன? அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஜொலித்தவர் டேவிட் வார்னர். டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது அவர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து பிரிமீயர் லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்தியாவில் டேவிட் வார்னருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக ஐபிஎல் போட்டிகளில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இதனால் அவர் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை உள்ளது.
டேவிட் வார்னருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி ஈஸ்டர் பண்டிகை நாளில் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகரில் உள்ள மரோவ்பிரா பகுதியில் மதுபோதையில் கார் ஓட்டி சென்றுள்ளார். அங்கு போலீசார் வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.
இதனை பார்த்த டேவிட் வார்னர் உடனடியாக டிரைவர் இருக்கையில் இருந்து பக்கத்து இருக்கைக்கு மாறினார். தனது பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணை கார் ஓட்டும் இருக்கைக்கு செல்லும்படி கூறினார். இதனை போலீசார் பார்த்தனர். இதையடுத்து டேவிட் வார்னரை பிடித்து போலீசார் ஆல்கஹால் சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக அவர் மதுபானம் அருந்தியது தெரியவந்தது.
இதனால் போலீசார் மரோவ்பிரா காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று ரத்த பரிசோதனை செய்தனர்.அப்போது 0.104 என்ற அளவில் ஆல்கஹால் இருந்தது தெரியவந்தது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட இருமடங்கு அதிகமாகும். மேலும் டேவிட் வார்னரும் தனது தவறை ஒப்புக்கொண்டார். தனது நண்பரின் அபார்ட்மெண்ட்டில் இரந்து 3 கிளாஸ் ஒயின் குடித்துவிட்டு கார் ஓட்டியதாக போலீசாரிடம் கூறினார்.
இதுதொடர்பாக வேவெர்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டேவிட் வார்னருக்கு எதிராக ஆதாரங்கள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.கடந்த ஜூலை மாதம் டேவிட் வார்னர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிமன்றம் டேவிட் வார்னருக்கு 1,500 ஆஸ்திரேலிய டாலரை அபராதமாக விதித்தது. இதன் இந்திய மதிப்பு சுமார் 1 லட்சத்து ஆயிரத்து 920 ஆகும்.
அதோடு டேவிட் வார்னரின் காரில் அடுத்த ஓராண்டுக்கு ‘ஆல்கஹால் இன்டர்லாக் சிஸ்டம்’ பொருத்த உத்தரவிடப்பட்டது. இந்த ‘ஆல்கஹால் இன்டர்லாக் சிஸ்டம்’ என்பது குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க பயன்படுகிறது. இந்த கருவி டிரைவர் இருக்கையில் இருந்து காரை ஓட்டுபவரின் மூச்சுக்காற்றில் ஆல்கஹால் இருப்பதை கண்டுபிடிக்கும். அதோடு காரை மேற்கொண்டு ஓட்ட முடியாத வகையில் நிறுத்திவிடும். இதன்மூலம் இனி டேவிட் வார்னர் மதுபானம் அருந்தினால் அவரால் காரை ஓட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


