Last Updated:
அமெரிக்க அதிபரின் இந்த கருத்து வெனிசுலா மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
போதைப் பொருளை அமெரிக்காவுக்குள் கடத்திக் கொண்டு வரும் வெனிசுலாவை சேர்ந்தவர்கள் மீது அந்நாட்டுக்கு சென்று தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலா நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக அதிக எண்ணிக்கையில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக அமெரிக்காவில் குற்ற செயல்கள் அதிகரிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் நிலவுகின்றன. இது சம்பந்தமாக கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலாவுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார்.
அத்துடன் வெனிசுலா அரசுடைய சில உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ தலைவர்கள் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் இணைந்து செயல்படுவதாகவும் அமெரிக்கா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது அடுத்த நடவடிக்கையாக வெனிசுலாவிலிருந்து வரும் விமானங்களுக்கு வான்படையை தடை செய்வதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. அத்துடன் வெனிசுலா மீது பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்திருப்பதால் நெருக்கடிகளை வெனிசுலா சந்திக்க தொடங்கி இருக்கிறது.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை வெனிசுலா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், போதைப்பொருள் கடத்தும் வெனிசுலா நபர்கள் மீது அந்நாட்டிற்கு சென்று தரைவழி தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
December 03, 2025 9:27 PM IST
போதைப் பொருள் கடத்துவோர் மீது நேரடி தாக்குதல்.. வெனிசுலாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..


