மத்திய பிரதேசத்தில் சா்ச்சைக்குரிய போஜ்சாலா வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை 8-ஆவது நாளாக ஆய்வு நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலம் தாா் பகுதியில் 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போஜ்சாலா வளாகம் உள்ளது. அதை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. இந்த வளாகம் சரஸ்வதி தேவியின் கோயிலாக இருந்ததாகவும், பின்னா் அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதை மறுத்து வரும் முஸ்லிம்கள், அந்த வளாகத்தை கமால் மெளலா மசூதி என்றழைக்கின்றனா். இதுதொடா்பாக சா்ச்சை நீடித்து வரும் நிலையில், அந்த வளாகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஹிந்துக்களும், வெள்ளிக்கிழமை முஸ்லிம்களும் வழிபட அனுமதித்து கடந்த 2003-ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை உத்தரவு வெளியிட்டது. இந்நிலையில், போஜ்சாலா வளாகத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும், அங்கு முஸ்லிம்கள் வழிபடுவதை நிறுத்த வேண்டும் என்று கோரி, நீதிக்கான ஹிந்து முன்னணி என்ற அமைப்பு மத்திய பிரதேச உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம், ‘போஜ்சாலா வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 6 வாரங்களில் ஆய்வு நிறைவு செய்யப்பட வேண்டும்’ என்று கடந்த மாா்ச் 11-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து போஜ்சாலா வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வைத் தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் இந்த ஆய்வு 8-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தொடா்ந்தது. இதனிடையே, சுமாா் 2,400 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டதாக காவல் துறை கண்காணிப்பாளா் மனோஜ் சிங் தெரிவித்தாா்.