Last Updated:
ஆந்திராவில் போக்சோ வழக்கில் கைதான தெலுங்கு தேச கட்சி நிர்வாகி நாராயண ராவ், ஏரியில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில், போக்சோ வழக்கில் கைதான தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி, ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயண ராவ். தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகியான இவர், அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு அருகில் உள்ள சப்போட்டா தோட்டத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து பாலியல் கொடுமை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
தாத்தா என கூறி மாணவியை அழைத்து வந்து இச்செயலில் ஈடுபட்ட அவருக்கு, விடுதியில் பணியாற்றும் சிலர் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சப்போட்டா தோட்டத்தில் நாராயண ராவ் இருந்ததை அறிந்த உள்ளூர் இளைஞர்கள், அவரைப் பிடித்து கடுமையாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து நாராயணராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறி ஏரி ஓரமாகச் சென்ற நாராயண ராவ் திடீரென ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவருடைய உடல், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலியல் வழக்கில் கைதானவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும்போது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
October 23, 2025 1:35 PM IST


