நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை மிகவும் வினைத்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான போக்குவரத்துச் சேவையாக மாற்றி, பொதுமக்களுக்குக் கௌரவமான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதற்காக முழுப் போக்குவரத்து கட்டமைப்பிலும் விரைவான மாற்றம் ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பொருளாதாரப் போட்டித்தன்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம், சமூக சமத்துவம் மற்றும் பிரவேசம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 05 தூண்களின் கீழ் போக்குவரத்து அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ள மூலோபாயத் திட்டம் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
கொழும்பு நகரில் தற்போது நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக ‘Lanka Metro Transit’ பஸ் சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் இதற்கான பஸ்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
கொழும்பைச் சுற்றியுள்ள 6 பிரதான வீதிகள் ஊடாக இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாகச் செயற்படுத்தப்படவுள்ளதோடு, மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் பின்னர் காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும், அடுத்த 03 ஆண்டுகளுக்குள் 08 பிரதான நகரங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் கொழும்பு நகருக்கு நாளாந்தம் பிரவேசிக்கும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பயணிகளைப் பொதுப் போக்குவரத்தை நோக்கி ஈர்க்க எதிர்பார்க்கப்படுகிறது. பஸ்களுக்கான முன்னுரிமைப் பாதைகளை அடையாளம் காண்பதும், அவற்றின் வினைத்திறனைப் பேணுவதும் அவசியமானது என ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். (a)

