Last Updated:
அபிஷேக் சர்மா ரன் அவுட் ஆனதற்கும் சூரியகுமார் யாதவே காரணம் என ரசிகர்கள் விமர்சித்துள்ளார்கள்.
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. 200 ரன்களைக் கடந்து இந்திய அணி ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஆமை வேகத்தில் விளையாடியதால் இந்திய அணியின் ரன் குவிப்பு வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.
ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவும், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இத்தகைய சூழலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 75 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கில் தன் பங்குக்கு 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். குறிப்பாக அக்சர் படேல் 15 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் சூர்யா குமார் யாதவ் 11 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
குறிப்பிடத்தக்க வகையில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சன் களமிறங்காமல் 8-ஆவது வீரராக இன்றைக்கு அமர வைக்கப்பட்டார். இந்திய அணியின் பந்துவீச்சு வலுவாக இருப்பதால் இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அதே நேரம் 169 ரன்கள் என்பது எட்டக்கூடிய ஸ்கோர் என்று கருதப்படுவதால் வங்கதேச அணியும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் மீது ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். முன்பு நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
September 24, 2025 10:15 PM IST


