கோலாலம்பூர்:
சுங்கை பூலோ (Sungai Buloh) பகுதியில் சுபஹ் (Subuh) தொழுகைக்கான பாங்கு (Azan) ஓசை, குடியிருப்பாளர்களின் தூக்கத்தைக் கெடுப்பதாகக் கூறி கடந்த காலங்களில் எழுந்த பழைய சர்ச்சையைச் சமூக ஊடகங்களில் மீண்டும் பரப்ப வேண்டாம் என்று போலீசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
‘பாங்கு ஓசை தூக்கத்தைக் கெடுப்பதாகப் புகார், சட்டமன்ற உறுப்பினர் போலீசில் புகார்’ (Dakwaan Azan Subuh Ganggu Tidur, ADUN Buat Laporan Polis) என்ற தலைப்பில் அண்மையில் முகநூலில் (Facebook) பரவி வரும் பதிவு, ஏற்கனவே சட்டப்படி புலனாய்வு செய்யப்பட்டு தீர்க்கப்பட்ட ஒரு பழைய சம்பவத்தைக் குறிப்பதாகும் என்று சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் முகமது ஹஃபீஸ் முகமது நோர் தெரிவித்தார்.
இனம் மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய வகையிலான தேவையற்ற ஊகங்களையோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களையோ பொதுமக்கள் பகிர வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பொது அமைதியைக் குலைக்கும் வகையிலான போலிச் செய்திகள், தூண்டுதல்கள் அல்லது உள்ளடக்கங்களைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் காவல்துறை தயங்காது” என்றார்.
தற்போது மீண்டும் பரப்பப்பட்டு வரும் இந்த விவகாரம், கடந்த ஜூன் 2021-இல் புஞ்சாக் ஆலமில் (Puncak Alam) நடந்த ஒரு சம்பவத்தோடு தொடர்புடையதாகும். அப்போது மாற்றுமதத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், முறையான அனுமதியின்றி அரைகுறை ஆடையுடன் (Shorts) அங்குள்ள ஒரு சூராவிற்குள் நுழைந்துள்ளார்.
அப்பகுதியில் வசிக்கும் சில குடியிருப்பாளர்களின் தூக்கம் பாங்கு ஓசையினால் கலைவதாகக் கூறி, ஒலிபெருக்கியின் சத்தத்தை சரிபார்க்கவே தாம் அங்கு வந்ததாக அந்த நபர் கூறியிருந்தார். இச்சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இது குறித்து போலீசில் புகார் அளித்திருந்தார்.
இது பல ஆண்டுகளுக்கு முன்பே முடித்து வைக்கப்பட்ட வழக்கு என்பதால், தற்போதைய சமூக அமைதியைக் கருத்தில் கொண்டு இதனைப் புதிய விவகாரம் போலத் தேவையின்றி மீண்டும் பரப்ப வேண்டாம் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.



