Last Updated:
ஈரானில் பணவீக்கம், ரியால் வீழ்ச்சி காரணமாக மக்கள் போராட்டம் நடத்த, டிரம்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டால் கடும் நடவடிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களை கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Death to the Dictator’ இந்த முழக்கத்தை தான் ஈரான் மக்கள் முன்வைத்து நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானில் பணவீக்கம் சுமார் 48 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளதால், சாமானிய மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் தவிக்கின்றனர்.
ஈரானிய நாணயமான ‘ரியால்’ அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தற்போது 1 டாலர் என்பது சுமார் 14 லட்சம் ரியால் என்ற நிலையை எட்டியுள்ளது. பொருளாதார நிலையை காரணம் காட்டி “இஸ்லாமியக் குடியரசு ஒழிக” என்ற கோஷத்தை முன்வைத்து, மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடுகின்றனர்.
1979- ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த ஆட்சி வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தலைநகர் டெஹ்ரானில் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கலவரங்களும் மூண்டன. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 50ஐ நெருங்கியது. ஒரு சில இடங்களில் அந்நாட்டு தேசியக் கொடியும் சேதப்படுத்தப்பட்டது.
கலவரத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில், ஈரான் மக்களை கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் உள்நாட்டு விஷயங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று ஈரான் எச்சரித்தும், டிரம்ப் தொடர்ந்து மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


