திருப்பதி: தெலுங்கானா மாநிலத்தில் பேருந்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசப் பயணம் செய்வதற்கான இலவசப் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்வேதா. கர்ப்பிணியான இவர் வெள்ளிக்கிழமை காலை அரசுப் பேருந்தில் பயணம் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டு கத்தினார்.
இதனையடுத்து சாலையோரம் பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர். பேருந்தின் நடத்துநர் சரோஜாவும் இதர பயணிகளும் ஸ்வேதாவுக்கு பேருந்திலேயே பிரசவம் பார்த்தனர். ஸ்வேதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதைக் கேள்விப்பட்டதும் கீழே இறங்கி நின்ற ஆண் பயணிகளும் பெண்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். பிரசவம் பார்த்த பெண் நடத்துநர் சரோஜாவுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாயும்-சேயும் சிகிச்சைக்குப் பின் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் அரசுப் பேருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசப் பயணம் செய்ய அனுமதி அட்டை வழங்குவதற்கு ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அது நடப்புக்கு வந்துள்ளது.


