ஈப்போ:
பேராக் மாநில JPJ, கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த 50 சதவீத அபராதத் தள்ளுபடி திட்டத்தின் கீழ், மொத்தம் 30.7 மில்லியன் ரிங்கிட் வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட 25.8 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு (2025) வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது.
பேராக் JPJ -வின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானம் 239 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் வருமானமான 217 மில்லியன் ரிங்கிட்டை விட அதிகமாகும்.
ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் நடைபெற்ற Operasi Pengarah 2026 சோதனையை ஆய்வு செய்த பிறகு, பேராக் ஜேபிஜே இயக்குநர் முகமட் யூசோப் அபுஸ்தான் இந்த விபரங்களை வெளியிட்டார்.
இன்றைய சோதனையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமை, வாகன உரிமம் (Road Tax) மற்றும் காப்பீடு காலாவதியானது போன்ற காரணங்களுக்காக மொத்தம் 226 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
நோக்கம்: சாலை விதிகளைப் பொதுமக்கள், குறிப்பாக விபத்து அபாயம் அதிகம் உள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவே இந்தச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.




