தாப்பா:
ஹரிராயா ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு கிளந்தானிலிருந்து சிலாங்கூருக்கு முறையான அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட 64 ஆடுகளைப் பேராக் மாநில கால்நடை மருத்துவச் சேவைத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 323.9-வது கிலோமீட்டர் அடையாளத்தில் (தாப்பா அருகே) ‘ஒப்ஸ் கோர்பான் தெகாஸ்’ (Ops Korban Tegas) என்ற பெயரில் அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது ஒரு லாரியை மறித்த அதிகாரிகள், அதில் இருந்த 37 செம்மறியாடுகள் மற்றும் 27 வெள்ளாடுகளைக் கண்டறிந்தனர்.
இந்த ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் 30,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியுடன் சேர்த்து மொத்தம் 1,10,000 ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
31 வயதுடைய லோரி ஓட்டுநர் கால்நடைகளைக் கொண்டு செல்வதற்கான முறையான போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை (Movement Permit) சமர்ப்பிக்கத் தவறிவிட்டார்.
எதிர்வரும் ஹரிராயா ஹஜ்ஜு பெருநாளுக்காக இந்த ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் 1953-ஆம் ஆண்டு விலங்குகள் சட்டத்தின் கீழ் தற்போது தீவிரமாகப் புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது. மாநில எல்லைகளைக் கடந்து கால்நடைகளைக் கொண்டு செல்லும்போது உரிய சுகாதாரச் சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்கள் அவசியம் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.




