பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஈரானின் அனைத்துத் துறைமுகங்களையும் முற்றுகையிடப் போவதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் 13 திங்கட்கிழமை (இன்று) கிழக்கு நேரப்படி காலை 10 மணி முதல் இந்த முற்றுகை நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் பாரபட்சமின்றி இந்த முற்றுகை பொருந்தும் என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகள்
ஹோர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அல்லாத பிற நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்தில் அமெரிக்கப் படைகள் தலையிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முற்றுகை தொடங்குவதற்கு முன்பு, வர்த்தக மாலுமிகளுக்கு முறையான அறிவிப்பின் மூலம் மேலதிக தகவல்கள் வழங்கப்படும் என்றும் மத்திய கட்டளைப் பிரிவு கூறியுள்ளது.
ஈரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்திய சர்வதேச கடல் பகுதியில் உள்ள ஒவ்வொரு கப்பலையும் அமெரிக்கப் படைகள் இடைமறிக்கும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
அமெரிக்க மசகு எண்ணெய் 8 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய் 104.24 டொலராக உயர்ந்துள்ளது. பிரெண்ட் மசகு எண்ணெய் 7 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய் 102.29 டொலராகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் இந்த முற்றுகை முயற்சிக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் ஏப்ரல் 22 வரை நடைமுறையில் இருக்க வேண்டிய அமெரிக்க – ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்த முற்றுகை மீறுவதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், முற்றுகையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் இராணுவக் கப்பல்கள் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் நீண்டகாலப் போருக்குத் தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவால் இந்தச் சூழலைத் தொழில்நுட்ப ரீதியாகக் கட்டுப்படுத்த முடியாது என்றும் ஈரான் தரப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

