ராமேஸ்வரி ராஜா, எல்.கே. ராஜ்
கோலாலம்பூர்:
சிறுபான்மை சமூகத்தினரிடையே தொழில்முனைவோரை நாம் எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதற்கு BRIEF-i திட்டம் சிறந்த உதாரணம். நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆணைக்கு ஏற்ப எந்த சமூகமும் பின்தங்கக்கூடாது எனும் கடப்பாட்டின் அடிப்படையில் இந்த வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என பேங்க் ரக்யாட் பிரிவ்-ஐ திட்டத்தின் வாயிலாக 43 பேருக்கு 3.8 மில்லியன் கடனுதவிக்கான காசோலையை ஒப்படைத்துப் பேசிய தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
27 ஜூன் 2024 நிலவரப்படி, BRIEF-i நிதியுதவித் திட்டம் நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோரிடமிருந்து 1,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளது.


இதில் மொத்தம் 5.7 மில்லியன் நிதி உள்ளது. 43 விண்ணப்பங்களுக்கு பேங்க் ராக்யாட் முதற்கட்டமாக ஒப்புதல் அளித்து 3.8 மில்லியன் வழங்கியது. மேலும் 135 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. எனவே, இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஆதரவுடன், அதிகமான தொழில்முனைவோர் சவால்களை சமாளித்து அதிக வெற்றியை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.
BRIEF-i திட்டம் தொழில்முனைவோர் துறையில் அதிக வெற்றிக்கு ஒரு ஊக்கியாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் வெற்றி தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, சமூகத்திற்கும் நாட்டிற்கும் கிடைத்த வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள் என இங்குள்ள பேங்க் ரக்யாட் வங்கியின் துன் அப்துல் ரசாக் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய அவர் குறிப்பிட்டார்.


நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நாடி தொழில் முனைவோர் துறை என்பதை மறுப்பதற்கில்லை. ஏனென்றால், தொழில்முனைவோர் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், பல்வேறு துறைகள் மற்றும் தொழில்களில் புதுமைகளையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியும். இந்நிலையில் பிரிப்–ஐ, தெக்குன் போன்ற அறிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்கள் மேம்பாட்டை உருவாக்கிக்கொள்ளுங்கள் என தொழில்முனைவோர்களை ரமணன் கேட்டுக்கொண்டார்.
மேலும் பேசிய அவர், நிதியுதவி பெற்ற தொழில்முனைவோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் கடன்களைப் பெற்றுக்கொண்டவர்களில் சிலர் மக்கள் ஓசையிடம் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.


அதில் 1 மில்லியன் கடனுதவியை பெற்ற தி.பி.எல் உணவு தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர் கமலநாதன் ஆறுமுகம், 2 லட்சத்து இருபதாயிரம் கடனுதவி பெற்றுக்கொண்ட ஜாதயு சர்விஸ் என்டர்ப்ரைஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வள்ளியம்மா குமாரசாமி, இருபதாயிரம் அருணா தையல் நிலையத்தின் உரிமையாளர் பிரேமிளா சுப்பிரமணியம் ஆகியோர் இந்த வாய்ப்பு தங்களின் தொழிலுக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டனர்.


மேலும், சரியான அணுகுமுறை மற்றும் முறையான விண்ணப்பங்களுடன் தாங்கள் இதற்கு அணுகிய நிலையில் சில தினங்களிலேயே அதற்கான ஒப்புதல் கிடைத்தது எனவும். இந்த வாய்ப்பினை வழங்கிய டத்தோ ரமணனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டனர்.


பேங்க் ராக்யாட்டின் தலைவர் டத்தோ முகமட் இர்வான் முகமட் முபாரக், பேங்க் ரக்யாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டாக்டர் முகமது ஹனிஸ் ஒஸ்மான் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், துணையமைச்சரின் முதன்மைச் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் ஆகியோரும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.


