Last Updated:
போலீசாருக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் அவசர அவசரமாக விவசாய நிலத்தில் உடலை எரித்துள்ளனர்.
கர்நாடகாவில் இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பமாக, அவரின் தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் மேல்குந்தா கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சங்கர் – மல்லம்மா. இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள். இதில், 18 வயதான மூத்த மகள் கவிதா அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இவர், திடீரென கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்தநிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு அவர் விஷம் குடுத்து தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் அவசர அவசரமாக விவசாய நிலத்தில் உடலை எரித்துள்ளனர். கவிதா, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரின் மரணத்தில் சிலர் சந்தேகம் கிளப்பியுள்ளனர். இது போலீசாரின் காதுக்கு சென்றதும், பெண்ணின் தந்தை சங்கரை பிடித்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இளம்பெண் கவிதா, ஆட்டோ ஓட்டுநரான மல்லப்பா புஜாரி என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர், வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதையும் மீறி இளைஞருடன் பேசி வந்ததால், கல்லூரி படிப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வீட்டிற்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளார். இருந்தபோதும், தனது காதலில் உறுதியதாக இருந்துள்ளார்.
இதனால், அடுத்த மூன்று தங்கைகளின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று கூறி கவிதாவை, அவரின் தந்தை அடித்து உதைத்துத்துள்ளார். அப்போது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் சங்கருக்கு ஆத்திரம் தலைக்கேறியுள்ளது. அதில், மகள் என்றும் பார்க்காமல் அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், வாயில் விஷத்தை ஊற்றி தற்கொலை செய்ததாக கூறி நாடகமாடியுள்ளார்.
தொடர்ந்து, உறவினர்களின் உதவியுடன் உடலை எடுத்துச் சென்று விவசாய நிலத்தில் ஏரித்தது விசாரணையில் அம்பலமானது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெண்ணின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் மகாலிங்கப்பா, தத்தப்பா ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால், இளம்பெண்ணை பெற்ற தந்தையே ஆணவக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகம் ஆடிய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
September 01, 2025 4:19 PM IST


