ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளியில் ரமாதேவி என்பவர் வசித்து வந்தார். இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரது மகனும் அவர்களிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி எங்கோ சென்றுவிட்டார். ரமாதேவியும், அவரது மகள் லட்சுமியும் மட்டும் சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் லட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயவாடாவைச் சேர்ந்த சீனிவாச ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, கணவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அதன் பின்னர், ரமாதேவி மட்டும் சட்டெனப்பள்ளியில் உள்ள சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். தாய் ரமாதேவியின் வீட்டிற்கு லட்சுமி, அவரது கணவர் மற்றும் குழந்தைகள் அவ்வப்போது வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ரமாதேவியின் வீடு திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. அப்போது, வீட்டிற்குள் படுத்திருந்த ரமாதேவி தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் எரிந்துபோன ரமாதேவி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரமாதேவியின் மகள் லட்சுமியை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய போலீசார், தீப்பிடித்து ரமாதேவி இறந்துவிட்ட தகவலை தெரிவித்துள்ளனர். தாய் இறந்துவிட்டாரே என்று பதறுவதற்கு பதிலாக, மிகவும் சாதாரணமாக அப்படியா என்று கேட்டிருக்கிறார் லட்சுமி. மேலும் நீண்ட நேரம் ஆகியும், தாயின் உடலைப் பார்க்க லட்சுமி வரவில்லை. இதனால், போலீசாருக்கு லட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சில மணி நேரம் கழித்து போலீசார் மீண்டும் லட்சுமியின் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. லட்சுமியின் நடவடிக்கைகளால் தீவிர சந்தேகமடைந்த போலீசார், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ரமாதேவி வீடு தீப்பற்றி எரிவதற்கு சற்று நேரம் முன்பு, பெண் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேறியது தெரியவந்தது.
அந்தப் பெண் லட்சுமிதான் என்பதை உறுதி செய்த போலீசார், விஜயவாடா சென்று லட்சுமியைப் பிடித்து விசாரித்தனர். முதலில் தனக்கு ஏதும் தெரியாது என்று கூறிய லட்சுமி, பின்னர் தாயை தானே கொலை செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தாய் ரமாதேவி வசித்துவந்த வீட்டை, தனது பெயருக்கு எழுதிக்கேட்டு இருக்கிறார் லட்சுமி. வீட்டை எழுதிக் கொடுக்க மறுத்ததால் ரமாதேவிக்கும், லட்சுமிக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று தூக்க மாத்திரை, பெட்ரோல் ஆகியவற்றுடன் வீட்டுக்கு வந்த லட்சுமி, தாய் ரமாதேவிக்கு உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்திருக்கிறார். தூக்க மாத்திரை கலக்கப்பட்ட உணவை சாப்பிட்டு ரமாதேவி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இருக்கிறார் லட்சுமி. போலீசாரின் விசாரணையில் இந்த தகவலை வாக்குமூலமாகவும் லட்சுமி தெரிவித்திருக்கிறார்
தாயை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த லட்சுமியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

