இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சியான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வலதுசாரிக் கூட்டணி 53 இடங்களை மட்டும் பெற்றுத் தனிப்பெரும் தொகுதியாக முன்னிலை வகித்த போதிலும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்தநிலையில் இஸ்ரேலியத் தேர்தல் வெளிநாட்டுச் சக்திகளாலும் அரபுக்கட்சிகளாலும் திருடப்பட்டு விட்டது என நெதன்யாகுவின் லிகுட் (Likud) கட்சி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேலியத் தேர்தல்
இதனடிப்படையில்,
- நெதன்யாகு வலதுசாரிக் கூட்டணி: 53 இடங்கள் (ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை)
- காடி ஐசென்காட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி: 48 இடங்கள்.
- அரபுப் பிரதிநிதித்துவக் கட்சிகள் (கூட்டுப் பட்டியல் & ரஅம்): 19 இடங்கள்
வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் பெரும்பான்மை கிடைக்காததைத் தொடர்ந்து லிகுட் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,
அரபுப் பிரதிநிதித்துவக் கட்சிகள் வெளிநாட்டு நிதியுதவிகள் (கத்தார் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பு) மற்றும் முறைகேடான மென்பொருள்களைப் பயன்படுத்தி வாக்காளர்களைத் திரட்டித் தேர்தலைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இம் முறைகேடுகள் தொடர்பாகச் சாட்சியங்களை மத்திய தேர்தல் ஆணைக்குழு (CEC), காவல்துறையினர் மற்றும் ஷின் பெட் (Shin Bet) பாதுகாப்புப் பிரிவிடம் சமர்ப்பித்துள்ளதாக லிகுட் கட்சி தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கம்
எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான காடி ஐசென்காட் (Gadi Eisenkot), நெதன்யாகு தரப்பு தேர்தலில் தோல்வியடைந்ததன் காரணமாகவே தேர்தல் முடிவுகளின் அங்கீகாரத்தைச் சீர்குலைக்க முயல்கிறது எனச் சாடியுள்ளார்.
முறைப்பாடுகள் குறித்து வழக்கமான நடைமுறைப்படி ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள மத்திய தேர்தல் ஆணைக்குழு, தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடிய முறையான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

19 இடங்களைக் கைப்பற்றியுள்ள அரபுப் பிரதிநிதித்துவக் கட்சிகள் தற்போதைய சூழலில் புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்திகளாக மாறியுள்ளன.
நெதன்யாகு கூட்டணிக்கு எதிரான எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்து நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்றத் தயார் என அரபுப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளதால் இஸ்ரேலிய அரசியலில் கடும் முட்டுக்கட்டை நிலை உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

