தெலுக் இந்தான்:
நேற்று பெருநாள் தொழுகைக்காக சென்றுகொண்டிருந்த பாகிஸ்தானிய ஆடவர்களின் மகிழ்ச்சி சோகத்தில் முடிந்தது.
ஜாலான் தெலுக் இந்தான்-பீடோர் 16 ஆவது கிலோமீட்டரில் நடந்த விபத்தில், மூவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.
சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து அருகில் உள்ள மசூதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர் என்று, ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் அமாட் அட்னான் பஸ்ரி கூறினார்.
நேற்றுக்காலை 8.10 மணிக்கு இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்றும், சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையின்படி, 36 வயதிலான ஒருவர் ஓட்டிச் சென்ற புரோட்டோன் சாகா கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கத்தில் சறுக்கி, சாலை ஓரத்தில் நடந்து சென்ற ஆறு பாதசாரிகள் மீது மோதியதாக நம்பப்படுகிறது என்றார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், குறித்த கார் ஓட்டுநர் கஞ்சா பாவித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.