ஓசூர்: காஷ்மீரில் மழை வெள்ளத்தால் ஜிப்சோபிலா மலர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் இம்மலருக்கு சந்தையில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஓசூர் பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மலர் சாகுபடியில் திறந்த வெளிகளில் சாமந்தி, செண்டுமல்லி, பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா உள்ளிட்ட மலர்களையும், பசுமைக் குடில்களில் புளூ, பச்சை, மஞ்சள், வெள்ளை டைசி மலர்கள், ஜிப்சோபிலா உள்ளிட்ட அலங்கார மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு அறுவடையாகும் அலங்கார மலர்கள் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகள், கோயில் திருவிழாக்களுக்கும், விஐபிகளை வரவேற்க பொக்கே தயாரிப்பு உள்ளிட்ட பயன்பாட்டுக்காகவும் டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. இதில், உலகில் சிறந்த திருமண மலர்களில் ஒன்றாக கருதப்படும் ஜிப்சோபிலா மலர்கள் காஷ்மீரில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இம்மலர்களுக்கு சந்தையில் ஆண்டு முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும். தற்போது காஷ்மீரில் கனமழை மற்றும் வெள்ளம் பாதிப்பு காரணமாக இம்மலர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தையின் தேவையை ஓசூர் பகுதி ஜிப்சோபிலா மலர் பூர்த்தி செய்து வருகிறது.
இதுதொடர்பாக விவசாயி ஹரீஸ் மற்றும் சிலர் கூறியதாவது: ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும் மலர்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் அலங்கார மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இம்மலர்களில் ஜிப்சோபிலா மலர் 300 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளோம்.
இம்மலர் சந்தையில் தேவை அதிகரிக்கும்போது, ஒரு கட்டு (500 கிராம்) ரூ.500-க்கும், மற்ற நாட்களில் ரூ.50-க்கும் விற்பனையாகும். ஓசூரிலிருந்து தினசரி 500 கிலோ வரை டெல்லி, கொல்கத்தா, நேபாளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது. காஷ்மீரில் தற்போது மழை காரணமாக இம்மலர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சந்தைகளில் வரத்து குறைந்துள்ள நிலையில், ஓசூரிலிருந்து 3.5 டன் மலர்கள் விற்பனைக்கு செல்கின்றன. மேலும், காஷ்மீரில் பனிக்காலம் தொடங்க உள்ளதால், வரும் 4 மாதங்கள் அங்கு உற்பத்தி குறையும்.
இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஓசூர் பகுதியிலிருந்து தினசரி 10 டன் மலர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இம்மலர்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள், திருமணம் உள்ளிட்ட விழாக்களில் மலர் கொத்து மற்றும் சுவர், மேடை அலங்காரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இம்மலர் சாகுபடிக்கு மாநில அரசு கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒரு ஏக்கரில் பசுமைக் குடில் அமைக்க ரூ.17 லட்சம் மானியம் வழங்கி வருகிறது. தற்போது, ஒரு ஏக்கரில் பசுமைக் குடில் அமைக்க ரூ.70 லட்சம் வரை செலவாகிறது. அதேபோல, இச்செடிகளுக்கான பராமரிப்பு செலவும் 5 மடங்கு உயர்ந்துள்ளது.
எனவே, மானிய தொகையை உயர்த்தி வழங்கி, இத்தொழிலை நம்பியுள்ள 15,000 விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ஓசூர் அருகே பாகலூரில் அறுவடை செய்யப்பட்ட ஜிப்சோபிலா மலர் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

