Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதிக்கு என்று பிரத்யேக செயலியை தவெக அறிமுகம் செய்து உள்ளது. இந்த செயலி எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பெரம்பூருககு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம், மற்ற தொகுதிகளுக்கு இப்படி பிரத்யேக ஆப் இருக்காதா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
தமிழக வெற்றிக்காக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு, மருத்துவ வசதி, குப்பைகள், கழிவு நீர் பிரச்சனை, பொதுவாக அடிப்படை பிரச்சனை போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து புகார் அளித்து குறைகளை மக்கள் பதிவு செய்வதற்காகவே பிரத்யக செயலியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தவெக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பூருக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து செயலியை முதல்வர் வெளியிடுவது ஏன் என்று மற்ற தொகுதி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு சில காரணங்களும் உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தார். அவர் எம்எல்ஏவாக இருந்தது. விஜய் ஜெயித்திருக்கக்கூடிய பெரம்பூரின் பக்கத்து தொகுதி தான்.. கிட்டத்தட்ட ஒரே ஏரியாவில் உள்ள தொகுதி தான். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் பார்த்து பார்த்து பல விஷயங்களை செய்தார். ஆனாலும் அவர் அந்த தொகுதியில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபுவிடம் தோற்றுப்போனார். இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு விஜய் மீதான தனிப்பட்ட கவர்ச்சி ஒரு காரணம் என்றாலும், சில நடைமுறை சிக்கல்களும் தொகுதிக்குள் இருந்தது என்று திமுகவின் கூட்டணி கட்சிகளே தேர்தல் முடிந்த பின்னர் கூறியிருந்தன. அதாவது தொகுதியில் அடிப்படையில் சில பிரச்சனைகள் இருந்தது என்று கூறினார்கள். இவை இன்று வரை பேசப்படுகிறது.
இந்த சூழலில் மற்ற தொகுதிகளில் பிரச்சனை என்றால் ஒரு எம்எல்ஏவின் தொகுதி, ஒரு அமைச்சரின் தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. பிரச்சனையை ஊடகங்கள் சாதாரணமாக கடந்து போய்விடும். மக்களும் பொறுமையாக இருந்தே பிரச்சனைகளை தீர்க்க முனைவார்கள்.ஆனால் முதல்வரின் தொகுதியில் பிரச்சனை என்றால், ஊடகங்களில் பெரிய அளவில் விமர்சனமாவதுடன், அரசுக்கு தரம் சங்கடம் ஏற்படும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.
அதனால் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க தனி செயலி அவசியம் என்று நினைக்கிறார்கள். தவெகவினரும் பெரம்பூருக்கு என்று தனி செயலி உருவானால் பிரச்சனைகளை உடனுக்குடன் முதல்வரின் கவனத்திற்கு செல்வதால் அதிகாரிகள் விரைந்து வேலை செய்வார்கள் என்று நினைக்கிறார்கள். எனவே தான் பெரம்பூர் தொகுதி என்று பிரத்யேக செயலியை முதல்வரும், தொகுதியின் எம்எல்ஏவுமான விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தவெக ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
எனினும் மற்ற தொகுதிகளிலும் இதுபோல் எம்எல்ஏக்கள் பிரத்யேக செயலியை கொண்டுவர வேண்டும் என்றும், அடிப்படை பிரச்சனைகளை மற்ற தொகுதி மக்களும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் அந்த செயலி இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஏனெனில் பெரம்பூர் போலவே தான் எல்லா தொகுதிக்கும் பிரச்சனைகள் இருக்கும். எனவே தொகுதி வாரியாக ஆப் அறிமுகம் செய்து, அதனை சரியாக நடைமுறைப்படுத்தி பிரச்சனைகளை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் பொதுமக்கள்.



