Last Updated:
Zomato நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, நிறுவனத்தின் பெயரை ‘Zomato Ltd’ என்பதிலிருந்து ‘Eternal Ltd’ என மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது.
சொமடோ (zomato) நிறுவனம் தனது பெயரை சொமடோ லிட் என்பதில் இருந்து எடெர்னல் லிட் (Eternal) என மாற்றுவதாக அறிவித்துள்ளது. இந்த பெயர் மாற்றத்திற்கு சொமடோ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
நிறுவனத்தின் வாரியம் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், இப்போது முறையாக பெயரை மாற்றுவதற்கு பங்குதாரர்களின் ஒப்புதல் தேவைப்படும்.
எனவே இது குறித்து, சொமடோ நிறுவனத்தின் சி.இ.ஓ. தீபிந்தர் கோயல், நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தீபிந்தர் கோயல் தெரிவித்திருப்பதாவது, “பெயர் மாற்றத்தை நிர்வாகக் குழு இன்று அங்கீகரித்துள்ளது. எனவே எங்கள் பங்குதாரர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பெயர் மாற்றம் அங்கீகரிக்கப்பட்டதும், நிறுவனத்தின் இணையதளம் ‘சொமடோ.காம் (zomato.com) என்பதில் இருந்து எடெர்நல்.காம் (eternal.com) என மாறும். அதேபோல், பங்கு குறியீட்டிலும் சொமடோ என்பது எடெர்நல் என மாறும். எடெர்நல் கீழ், சொமடோ (Zomato), பிலிங்கிட் (Blinkit), டிஸ்ட்ரிக்ட் (District) மற்றும் ஹைபர்பூர் (Hyperpure) ஆகியவை அடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
பெயர் மாற்றம் குறித்து அந்நிறுவனம் பம்பாய் பங்குச் சந்தைக்கும் தகவல் தெரிவித்துள்ளது. பம்பாய் பங்குச் சந்தைக்கு நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “நாங்கள் பிலிங்கிட்-ஐ வாங்கிய பிறகு நிறுவனத்திற்குள்ளாக சொமடோ என்பதற்கு பதிலாக எடெர்நல் என்றே அழைத்து வருகிறோம். எனவே இதனை பொதுப்படையாக அறிவித்து பொதுவெளியிலும் பெயர் மாற்ற முடிவெடுத்தோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும், செயலி பெயரில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
February 06, 2025 7:47 PM IST


