அன்டார்டிகாவில் பென்குயின்கள் வாழும் இரு தீவுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ளார். இதுதொடர்பான நகைச்சுவை ‘மீம்ஸ்கள்’ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
அமெரிக்க பொருட்கள் மீது அதிக இறக்குமதி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதன்படி 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இந்த பட்டியலில் அன்டார்டிகாவில் உள்ள ஹியர்ட், மெக்டொனால்ட் ஆகிய 2 தீவுகள் இடம் பெற்றுள்ளன. இந்த தீவுகளில் பென்குயின் பறவைகள் மட்டுமே வாழ்கின்றன.
மனிதர்களே வசிக்காத இரு தீவுகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்திருக்கிறார். இதுதொடர்பாக எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நகைச்சுவை ‘மீம்ஸ்கள்’ வைரலாக பரவி வருகின்றன.
கிறிஸ்டோபர் என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பில் இருந்து பென்குயின்கள்கூட தப்ப முடியாது” என்று குறிப்பிட்டு உள்ளார். அதோடு அவர் கிராபிக்ஸ் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்புடன் ஒரு பென்குயின் ஆக்ரோஷமாக பேசுகிறது.
கனடாவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 10 சதவீத வரி விதிப்பால் பென்குயின்கள் கண் கலங்கி நிற்கின்றன. அதிபரிடம் நேரடியாக நியாயம் கேட்கின்றன. எங்கள் மீதான வரிவிதிப்பை ரத்து செய்யுங்கள் என்று ட்ரம்பிடம் பென்குயின்கள் மன்றாடுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர் ஒரு கிராபிக்ஸ் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் ட்ரம்பை சுற்றி ஏராளமான பென்குயின்கள் கண்ணீர்மல்க நிற்கின்றன.
மற்றொரு சமூக வலைதள பதிவில், “ட்ரம்பின் வரிவிதிப்புக்கு எதிராக பென்குயின்கள் ஒன்றிணைந்துள்ளன. அவரை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
சன்சன் கிர்லி என்பவர் சமூக வலைதளத்தில் ஒரு கிராபிக்ஸ் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் நகைச்சுவை உரையாடல் இடம்பெற்றிருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும் என்று பென்குயின்களுக்கு அதிபர் ட்ரம்ப் கண்டிப்புடன் உத்தரவிடுகிறார். இதை ஏற்க மறுக்கும் பென்குயின்கள், நாங்கள் வேறு நாடுகளுடன் வணிகத்தை தொடங்குவோம் என்று எச்சரிக்கை விடுக்கின்றன. இதேபோல ஏராளமான நகைச்சுவை ‘மீம்ஸ்கள்’ சமூக வலைதளங்களில் நிறைந்துள்ளன.