பணத்தின் மீது கொண்ட ஆசையால் காதல் மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்ததை அறிந்தும், குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு கொலைபாதகச் செயலில் ஈடுபட்டுள்ளார் கணவர். பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் இளைஞரின் வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வாழ்ந்துவந்த பெண், தனது இன்னுயிரை இழந்துள்ளார். பெண் போலீஸ் அதிகாரியின் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய கணவர் குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை பாயுமா?
டெல்லியை சேர்ந்த தம்பதி அங்குர் – காஜல் சவுத்ரி. இவர்களில் அங்குர் பாதுகாப்புத் துறையில் எழுத்தராக பணியாற்றி வந்தார். காஜல் டெல்லி காவல் துறையில் ஸ்வாட் (SWAT) எனப்படும் சிறப்பு பிரிவில் கமாண்டோவாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும், கடந்த 2023ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. காதல் திருமணத்திற்கு அங்குர் குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், தனது பெற்றோரை சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார் அங்குர்.
திருமணமான 15வது நாளிலேயே மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். கார் வாங்கி வா, நகை வாங்கி வா என மாமியார் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. போலீஸ் கமாண்டோவாக இருந்துகொண்டு பல்வேறு சவால்களை நெஞ்சுறுதியுடன் எதிர்கொண்ட வீரப் பெண்ணுக்கு, வரதட்சணை கொடுமையை சமாளிக்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவர், கணவருடன் மோகன் கார்டன் பகுதியில் தனிக்குடித்தனம் சென்றுள்ளார். அங்கு சென்றதும் காதல் கணவனும் தனது பங்கிற்கு வரதட்சணை கேட்டு அடித்து, உதைத்து துன்புறுத்தியுள்ளார். அத்துடன், மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழலாம் என்று கூறி கடும் அழுத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நான்கு மாத கர்ப்பிணி என்பதை அறிந்திருந்தும், ஈவு இரக்கமின்றி தலையை சுவற்றில் அடித்து அரக்கத்தனமாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த காஜல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்குரை கைது செய்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று காஜல் சவுத்ரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், புதன்கிழமை அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
வரதட்சணை கொடுமையால் காதல் மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், அவரை கணவனே தம்பெல் மூலம் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

