Last Updated:
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவர் என்ற பெருமைக்குரியவர் அனிதா சௌத்ரி. பெண்களுக்கு தன்னம்பிக்கை அளித்து தங்கள் சொந்தக் காலில் நிற்க உத்வேகம் கொடுத்துவந்த அனிதா கடந்த 4ஆம் தேதி இரவு ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தபோதே மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவரான அனிதாவை அவரது முன்னாள் கணவர் சுட்டுக் கொலை செய்த வழக்கில், போலீசார் கணவரை காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர் கைவிட்டு சென்றதால் அரங்கேற்றப்பட்ட படுகொலை சம்பவத்தின் பின்னணி என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவர் என்ற பெருமைக்குரியவர் அனிதா சௌத்ரி. பெண்களுக்கு தன்னம்பிக்கை அளித்து தங்கள் சொந்தக் காலில் நிற்க உத்வேகம் கொடுத்துவந்த அனிதா கடந்த 4ஆம் தேதி இரவு ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தபோதே மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அவர் ஓட்டிச்சென்ற ஆட்டோ ரோட்டோரம் கிடந்தது. அனிதாவின் உடல் சாலையோரம் கிடந்தது. இது குறித்து அனிதாவின் கணவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் துப்பாக்கியுடன் வந்து, சரமாரியாக சுட்டு விட்டு தப்பிச் சென்றவர்களின் அடையாளம் தெரியவந்தது.
தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து சிவம் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் அதிரடியாக தட்டித் தூக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல் ஒன்று தெரியவந்தது. அவர்கள் இருவரும் தங்கள் நண்பன் முகேஷ் என்பவருக்காக இந்த கொலையை அரங்கேற்றியதாகக் கூறியுள்ளனர்.
முக்கிய குற்றவாளி முகேஷ் யார்? என விசாரித்தபோதுதான் போலீசாருக்கு பெரும் ட்விஸ்டாக இருந்தது. அந்த முகேஷ், சுட்டுக் கொல்லப்பட்ட அனிதாவின் முன்னாள் கணவர் என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த ட்விஸ்ட்.
முகேஷை கண்டுபிடிக்க களத்தில் இறங்கிய போலீசார் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்தியபோது அவரது காரை ஆற்றுப்பாலம் ஒன்றின் அருகே கண்டுபிடித்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்து தண்ணி காட்டிவந்த முகேஷை பகவான்புரா என்ற இடத்தில் போலீசார் சுற்றி வளைத்தனர்.
படுகாயமடைந்து சுருண்டு விழுந்த முகேஷை மடக்கிப் பிடித்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அவரிடம் விசாரித்தபோதுதான் கொலைக்கான காரணமே தெரியவந்தது.
அனிதாவும், முகேஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் கோயிலில் திருமணமும் செய்துகொண்டுள்ளனர். ஆனால், அவர்களது உறவு நீண்ட நாள் நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், அனிதா முகேஷை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டார். அதோடு அனிதா வேறு ஒரு திருமணமும் செய்து கொண்டார். இதனால் அனிதா மீது கடும் ஆத்திரத்தில் இருந்துவந்த முகேஷ் அவரை கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். அவர்களது திருமண நாளில் தீர்த்துக் கட்ட வேண்டும் என திட்டமிட்ட முகேஷ் நண்பர்களின் துணையோடு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.
சம்பவத்தன்று ஆட்டோவை ஓட்டிக் கொண்டு சவாரிக்காக சென்றுகொண்டிருந்த அனிதாவை சாலை நடுவே தடுத்து நிறுத்தி சுட்டுக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முகேஷை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.


