Last Updated:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்ராவைச் சேர்ந்த உஷா ஜோசப் என்பவருக்கு, கடந்த 2021, மே மாதம் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கருப்பை கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கேரளாவில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தையல் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து ஆண்டுகளாக கத்தரிக்கோலை வயிற்றில் சுமந்துகொண்டு, வலி வேதனையுடன் வாழ்ந்த பெண்ணுக்கு நீதி கிடைக்குமா?
கருப்பை அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தையல் போட்டு, கடும் சிரமத்திற்கு உள்ளாக்கிய அரசு மருத்துவர்கள். அலட்சியத்தால் 5 ஆண்டுகளாக வலியோடு போராடிய அவலம். மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கத்திரிக்கோலை அகற்றினாலும், இயல்பு வாழ்க்கை திரும்புமா? கேரளாவில் பிரளயத்தை ஏற்படுத்திய சம்பவத்தின் பின்னணி என்ன?
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்ராவைச் சேர்ந்த உஷா ஜோசப் என்பவருக்கு, கடந்த 2021, மே மாதம் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கருப்பை கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர், கடுமையான வயிற்று வலி மற்றும் சிறுநீரில் இரத்தம் கசிவு என கடும் உபாதைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அறுவை சிகிச்சையின் பக்க விளைவு என நினைத்து, வலி அதிகரிக்கும்போதெல்லாம் மெடிக்கல்லில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு நாட்களைக் கடத்தியுள்ளார். சமீபத்தில் அவருக்கு மிக கடுமையான வயிற்று வலி உண்டாக, உஷா ஜோசப்பை அவரது குடும்பத்தினர் மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அப்போது, எக்ஸ்-ரே பரிசோதனையில் பேரதிர்ச்சியாக அவரது வயிற்றில் 12 செ.மீ. நீளமுள்ள கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. கருப்பை அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக கத்தரிக்கோலை உஷாவின் வயிற்றிலேயே வைத்து தையல் போட்டுள்ளனர்.
அது 5 ஆண்டுகளாக உள்ளேயே இருந்ததால் உஷாவின் வயிற்றில் கடும் இன்பெக்ஷன் ஏற்பட்டு நிலைமை மோசமாகி உள்ளது. தற்போது இச்சம்பவம் கேரளாவையே உலுக்கி உள்ளது. உஷா ஜோசப்பின் வயிற்றில், கத்தரிக்கோலை வைத்துத் தைத்த மருத்துவர் யார்? ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இப்படியா அலட்சியமாக சிகிச்சை அளிப்பது? என பலரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து முறையாக விசாரிக்க, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து அறுவை சிகிச்சை… 5 ஆண்டுகளாக வேதனையில் துடித்த பெண்… கேரளாவையே உலுக்கிய சோகம்…


