தென்காசி: கிராமப்புற பெண்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது தயாரிப்புகளை, படைப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய ஏதுவாக பிரத்யேக ஆன்லைன் வணிக தளமாக ‘கொற்றவை’ தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பெண்களுக்கு பீடி சுற்றுவது பிரதான தொழிலாக உள்ளது. அதன்மூலம் ஏற்படும் உடல்நலக் குறைவை கருத்தில் கொண்டு, மாற்றுத் தொழில்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஜோஹோ நிறுவனத்தால் ‘கொற்றவை’ என்ற, இலவச ஆன்லைன் வணிக தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பீடி தொழிலாளிகள், தாய்மார்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சுயதொழில் புரியும் பெண்கள் என அனைவருக்குமாக ‘கொற்றவை’ ஆன்லைன் விற்பனை தளம் இயங்கவுள்ளது. கிராமப்புற பெண்கள் தங்களது கைவண்ணத்தில் உருவாக்கும் சிறு பரிசு பொருட்கள், சமையல் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகுப் பொருட்கள் என தங்கள் படைப்புகள் அனைத்தையும், உலகம் முழுவதும் விற்பனை செய்ய ‘கொற்றவை’ இலவசமாக உதவுகிறது.
இந்நிலையில், கிராமப்புற பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள ‘கொற்றவை’ மின் வணிக தளம் அறிமுக விழா தென்காசி மாவட்டம், கடையம் அருகே கோவிந்தபேரியில் உள்ள கலைவாணி கல்வி மையத்தில் நடைபெற்றது. தலைமை நிர்வாக அலுவலர் காருண்யா குணவதி வரவேற்று பேசினார். ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஶ்ரீதர் வேம்பு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
புதிய தளம் குறித்தும், அதன் மூலம் வர்த்தகம் செய்வது குறித்தும் இணை நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி பேசினார். பிரவிகா நன்றி கூறினார். இதுதொடர்பான விவரங்களுக்கு 97870 46331 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று ‘கொற்றவை’ நிர்வாகிகள் தெரிவித்தனர்.