Last Updated:
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் (ஐ.ஆர்.டி.) மூலம் பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
தமிழ்நாடு அரசு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு பிரத்யேகமாக இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதையும், போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்புகளைத் திறப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் (ஐ.ஆர்.டி.) மூலம் பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. குறைந்தது 20 வயதுடைய பெண்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
தமிழகம் முழுவதும் 16 இடங்களில் உள்ள மையங்களில் பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. அதில், கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி (MCJ), கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பொள்ளாச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகியவை ஆகும்.
மொத்தம் 65 வேலை நாட்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் பயிற்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு கனரக வாகனங்களை ஓட்டுவதில் திறன்களையும், நம்பிக்கையையும் வழங்குகிறது.
இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கான தகுதி (தமிழ்நாடு):
- 20 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
- தமிழில் சரளமாகப் பேசவும், புரிந்துகொள்ளும் திறனும் இருக்க வேண்டும்.
- இலகுரக மோட்டார் வாகன (LMV) உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு வருடம் நிறைவடைந்திருக்க வேண்டும்.
- பப்ளிக் சர்வீஸ் வெஹிகிள் (PSV) பேட்ஜ் பதியப் பெற்றிருக்க வேண்டும்.
- மருத்துவ சோதனை, கண் பார்வை சோதனை போன்றவை நடைபெறும்.
இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- அதிகாரப்பூர்வ நான் முதல்வன் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
- ஆப்ஷன்களின் பட்டியலிலிருந்து “ஆட்டோமொபைல்” துறையைத் தேர்ந்தெடுக்கவும்.
- “வர்த்தக கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி நிலை IV” என்ற தலைப்பில் உள்ள பாடத்திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
- கேட்கப்படும் அனைத்துத் தனிப்பட்ட விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
- கிடைக்கும் பட்டியலில் இருந்து உங்களுக்கு விருப்பமான பயிற்சி மையத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
- விண்ணப்பத்தின்போது உங்கள் ஆதார் நம்பரை என்டர் செய்ய வேண்டும்.
- உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை எப்போதும் ஆக்டிவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
July 30, 2025 9:46 PM IST
பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் தமிழ்நாடு அரசு… வயது வரம்பு, தகுதி என்ன…? விண்ணப்பிப்பது எப்படி…?