India
oi-Nantha Kumar R
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு சார்பில் பெட்ரோல் – டீசல் மீது ‘விதவை மற்றும் அனாதைகள் வரி’ என்ற பெயரில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் அங்கு பெட்ரோல், டீசல் விலைகள் உயர தொடங்கி உள்ளன. இந்த ‘விதவை மற்றும் அனாதைகள் வரி’ என்பது என்ன? அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு உள்ளார். இந்த மாநிலம் நிதி நெருக்கடியில் சிக்கி வருகிறது. இந்நிலையில் தான் இமாச்சல பிரதேசத்தில் நள்ளிரவு முதல் திடீரென்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.

இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பணவீக்கம் காரணம் அல்ல. அதேபோல் கச்சா எண்ணெய் விலை உயர்வும் காரணமில்லை. மாறாக அம்மாநில அரசு பெட்ரோல், டீசல் மீது விதித்த புதிய வரி தான் காரணம்.
‘ஆம்’ இமாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பெட்ரோல் – டீசல் மீது லிட்டருக்கு 60 பைசா புதிய வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியின் பெயர் விதவை மற்றும் அனாதை வரி (Widow and Orphan Cess). மாநிலத்தில் உள்ள விதவைகள் மற்றும் அனாதைகளுக்கு உதவி செய்யும் வகையில் இந்த வரி விதிப்பு அமலாகி உள்ளது. இந்த வரி விதிப்பு என்பது ஆயில் கம்பெனிகளிடம் இருந்து டீசலர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கும்போதே விதிக்கப்படும்.
இதற்காக இமாச்சல பிரதேசத்தில் தனி சட்டமே உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அம்மாநில சட்டசபையில் இதற்கான மசோதாவை கொண்டு வந்தது. அதாவது பெட்ரோல், டீசல் மீது ‘விதவை மற்றும் அனாதை வரி’ விதிக்க வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு விதவை, அனாதைகளின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இந்த சட்டத்தின்படியே இப்போது இமாச்சலில் பெட்ரோல் – டீசல் மீது லிட்டருக்கு விதவை மற்றும் அனாதை வரியாக 60 பைசா வசூலிக்கப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை ‘விதவை மற்றும் அனாதைகள் வரி’ என்ற பெயரில் லிட்டருக்கு ரூ.5 வரை வரி விதிக்க சட்டத்தில் அனுமதியுள்ளது. இதனால் தற்போதைய இந்த நடவடிக்கை வெறும் தொடக்கம் மட்டுமே. வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் மீதான ‘விதவை மற்றும் அனாதைகள் வரி’ தொடர்ந்து அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

