Last Updated:
வெற்றியை கொண்டாடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட பேரணி தற்போது சோகத்தில் முடிந்திருப்பதாக விராட் கோலி உள்ளிட்ட ஆர்சிபி வீரர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்றுள்ள நிலையில், வெற்றிக் கொண்டாட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்றன.
இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் களம் கண்டன. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 190 ரன்கள் குவித்தது. 191 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஆர்சிபி கோப்பையை வென்றுள்ளதால், அதன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இன்று பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது.
குறிப்பாக ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அப்போது ஒருவர் தோள் மீது இன்னொருவர் ஏறினார்கள். இப்படி ஏராளமானோர் செய்ததால் நெரிசல் கடுமையாக ஏற்பட்டது.
கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டதால், கீழே விழுந்தவர்கள் மேலே எழுந்திருக்க முடியாத அளவிற்கு பக்கத்தில் இருந்தவர்கள் மிதித்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் முதற்கட்டமாக வெளிவந்தன. ஆனால், 11 பேர் உயிரிழந்திருப்பதாக பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள போரிங் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் நியூஸ் 18-க்குத் தகவல் அளித்துள்ளார்.
இன்னும் காயம் அடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. வெற்றியை கொண்டாடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட பேரணி தற்போது சோகத்தில் முடிந்திருப்பதாக விராட் கோலி உள்ளிட்ட ஆர்சிபி வீரர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
June 04, 2025 6:09 PM IST


