ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள 68 கி.மீ. பாதை:
சமீபத்தில்தான் கர்நாடகாவுக்குள் உள்ள விரைவுச் சாலையின் 68 கி.மீ. பகுதி பொதுமக்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக திறக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் கட்டுமானப் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதே காரணம்.
தற்போது வாகன ஓட்டிகள் ஹோஸ்கோட்டேவில் இருந்து பெத்தமங்கலா (கேஜிஎஃப்) செல்லும் சாலையைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், தங்களது இடத்தை அடைய சரியான இணைப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் குறுகிய கிராம சாலைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த சிரமத்தை தீர்க்க, உள்ளூர் சாலைகள் – மாவட்ட மற்றும் கிராமச் சாலைகளை – மேம்படுத்தவும், NH-75-ல் சுந்தரபாளையா மற்றும் முல்பாகல் பகுதிகளுக்கு விரைவுச் சாலையை இணைக்கவும் NHAI விரும்புகிறது.
இது குறித்து பேசிய NHAI அதிகாரி ஒருவர், “தற்போது, வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தைத் தொடர கிராமப்புற சாலைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த விரைவுச் சாலையை NH-75 உடன் இணைப்பதன் மூலம், அதிக வாகன ஓட்டிகள் பயனடைவார்கள். மேலும் விரைவில் சுங்கக் கட்டண வசூல் தொடங்கப்படலாம்” என்றும் குறிப்பிட்டார். தற்போது தினசரி சுமார் 1,800 முதல் 2,000 வாகனங்கள் விரைவு சாலையை (expressway) பயன்படுத்துகின்றன, மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விதிகளை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகள்…
அதிவேக நெடுஞ்சாலையில் இன்னும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் டிராக்டர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்றாலும், இவற்றில் பல வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. இதை தடுக்க அதிகாரிகள் அறிவிப்புப் பலகைகளை வைத்துள்ளனர். தவிர, உள்ளூர் போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த விரைவுச் சாலை பெங்களூரு கிராமப்புறம், கோலார் மற்றும் கேஜிஎஃப் ஆகிய மூன்று காவல் மண்டலங்கள் வழியாக செல்கிறது. கேஜிஎஃப்-ல், விரைவுச் சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் நுழைய வேண்டாம் என்று எச்சரிக்க சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
எனினும், தற்போது வரை கேமரா அடிப்படையிலான அபராதங்கள் விதிக்கும் நடைமுறை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் கோலார் மாவட்ட நிர்வாகப் பொறியாளரிடம், சாலை மேம்பாடுகள் மற்றும் தற்போதுள்ள சாலைகளை வாகனப் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்ற தேவையான மேம்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க NHAI கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
April 15, 2025 8:35 PM IST

