பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கர்நாடகா இளைஞர்கள் இரண்டு பேரின் அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருவரும் சென்னையில் தங்கியிருந்த தகவலும் கிடைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ ஹோட்டலில் கடந்த 1ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. குண்டு வெடிப்பில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது
காட்டிக் கொடுத்த தொப்பி..
குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. ஹோட்டலுக்கு தொப்பி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டை வைத்து சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டன. தொப்பி அணிந்து கொண்டு நடந்து செல்வதும், தொப்பியுடன் பேருந்தில் அமர்ந்து இருப்பதும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகி இருந்தன. குண்டு வெடிப்பு சம்பவ விவகாரத்தில் தொப்பி முக்கிய துருப்புச் சீட்டாக போலீசாருக்கு இருந்தது.
குண்டு வைத்த நபர் அணிந்திருந்த தொப்பி, குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள கழிவறை ஒன்றில் கிடந்தது. அதை கைப்பற்றிய என்ஐஏ அதிகாரிகள் அதிலிருந்து விசாரணையை தொடங்கினர். தொப்பியில் இருந்த ஒரு குறியீட்டு நம்பரை வைத்து, அந்த தொப்பி சென்னையில் வாங்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர்.
சென்னையில் வாங்கப்பட்ட தொப்பி?
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இருந்து தொப்பி வாங்கப்பட்டது தெரியவந்தது. சென்னையில் உள்ள குறிப்பிட்ட வணிக வளாகத்தில் போலீசார் விசாரணை நடத்த, தொப்பி அங்கு வாங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் தங்கியிருந்த பயங்கரவாதிகள்
தொப்பி வாங்கியபோது கொடுக்கப்பட்ட ரசீது விவரங்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. விடுதியில் நடத்தப்பட்ட விசாரணையில் குண்டு வைத்தவரின் முழுவிவரங்களும் புகைப்படத்துடன் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்தன. கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹல்லி பகுதியை சேர்ந்த முஷாவீர் உசேன் சாகிப் என்பவர் தான் குண்டு வைத்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் அவரது கூட்டாளியான அப்துல் மாத்ரன் டாஹா என்பவருக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2022-ம் ஆண்டில் பெங்களூரில் நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில் இவர்களுக்கு தொடர்பிருப்பதும், அது முதல் இவர்கள் தலைமறைவாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தேடும் இருவரும் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சென்னை திருவல்லிக்கேணி விடுதியில் தங்கியுள்ளனர்.
ஆந்திராவில் தலைமறைவு?
சென்னையிலிருந்து பெங்களூரு சென்று குண்டு வைத்து விட்டு கேரளா தப்பி சென்றுள்ளனர். கேரளாவில் இருந்து சென்னை வந்து பின்னர் ஆந்திராவிற்கு சென்றிருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குண்டு வைத்தவர்களின் செல்போன் கடைசியாக நெல்லூரில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொப்பியில் இருந்த முடியில் டிஎன்ஏ சோதனை
பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பு வழக்கில் தொப்பி தான் முக்கிய துருப்பு சீட்டாக அமைந்துள்ளது. கழிவறையில் சிக்கிய தொப்பியில் குண்டு வைத்த நபரின் முடிகளும் இருக்க, அவற்றை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். ஒரு தொப்பியை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றவாளியின் புகைப்படம் உட்பட அனைத்து தகவல்களும் கிடைத்து இருக்கிறது.
பெங்களூரு ஹோட்டலில் குண்டு வைத்தவர் அணிந்திருந்த தொப்பி சென்னையில் வாங்கப்பட்டிருப்பதும், குண்டு வைத்த இருவர் சென்னை திருவல்லிக்கேணி விடுதியில் தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் குண்டு வைத்த குற்றவாளிகள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…