தொழில்நுட்ப காரணத்தால், பெங்களூரு-ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டம் சாத்தியம் இல்லை என கர்நாடகா அரசிடம் பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு ஓசூரில் இருந்தும் தினசரி ஆயிரகணக்கானவர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். ஓசூர்-பெங்களூருக்கு இடையே 40 கிமீ தூரம் உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே சாலை போக்குவரத்தில் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், தொழிலாளர்கள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு- ஓசூர் இடையே தென்னிந்தியாவிலேயே இரு மாநிலங்களை இணைக்கும் முதல் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆய்வு மேற்கொண்டன.
அதன்படி, தமிழக எல்லையில் சென்னை மெட்ரோ நிர்வாகமும்,ல கர்நாடகா எல்லையில் பெங்களூரு மெட்ரோ நிர்வாகமும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை தொடங்க திட்டமிட்டனர். மேலும் இத்திட்டத்துக்கான வழித்தடம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வரைவு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இதனிடையே, பெங்களூரு- ஓசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் தொழில் நுட்ப காரணமாக சத்தியமில்லை என பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் கர்நாடகா அரசிடம் அறிக்கை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தனது வழித்தடங்களில் 750 வோல்ட் டிசி உயர்மட்ட கேபிள் வசதியுடன் ரயில்களை இயக்கி வருகிறது. இதே தொழில்நுட்பத்தில் கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா முதல் அத்திப்பள்ளி வரையான மெட்ரோ ரயில் சேவைக்கு அறிக்கை தயாரித்துள்ளது.
சென்னை மெட்ரோ நிர்வாகம் 25 கிலோ வோல்ட் ஏசி உயர்மட்ட கேபிள் வசதி மூலம் ரயில்களை இயக்கி வருவதால், அதே தொழில் நுட்பத்தில் ஓசூர்- பொம்மசந்திரா இடையே 23 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவைக்கு திட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இரு மின் அளவும் மாறுபாட்டிருப்பதால், இரு தொழில் நுட்பங்களையும் இணைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை. இருப்பினும் இரு மாநில அரசுகளே இறுதி முடிவை எடுக்கும். இவ்வாறு என கூறினர்.
இதுதொடர்பாக ரயில் பயணிகள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் தொழிற்சாலைகள் தொடங்க தொழில் முனைவோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தமிழக அரசு தொழில் முனைவோரை வரவேற்கும் வகையில், ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தது.
இதேபோல, கர்நாடகா அரசு பெங்களூரு- பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், பொம்மசந்திராவிலிருந்து அத்திப்பள்ளி வரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அத்திப்பள்ளியிலிருந்து ஓசூர் வரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க தமிழக அரசு முயற்சி செய்தது. தற்போது தொழில்நுட்பம் காரணமாக சாத்தியமில்லை என பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது.
ஓசூருக்கு மெட்ரோ ரயில் சேவை வந்தால் தொழில் வளர்ச்சி அடையும். எனவே, தமிழக அரசு இத்திட்டத்தில் உள்ள தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.