பெங்களூரில் ஒரு கப் காபி ரூ.350.. ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கினாலும் வீடு வாங்க முடியாது! புலம்பும் டெக்கி!
பெங்களூரில் எகிறி வரும் செலவுகள், போதாத சம்பளம், டிராபிக் பிரச்சனை இப்படி சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. இது குறித்த செய்திகள் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்டாகும். பெங்களூரில் பணிபுரியும் அன்மோல் அகர்வால் என்ற ஐடி ஊழியரின் வீடியோ தற்போது தீயாய் பரவத் தொடங்கியுள்ளது. அதில் அவர் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வாங்குபவர்களாலும் பெங்களூரில் சொந்த வீடு வாங்க முடியாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
50 லட்சம் சம்பளம் வாங்குபவர் பெரும் சிரமங்கள் என்ன என்பதையும் அன்மோல் பகிர்ந்திருந்தார். ஒருவர் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம் தரும் நிறுவனத்தில் பணிபுரிந்தால் வருமான வரி, பிஎஃப் மற்றும் இதர பிடித்தம் எல்லாம் போக கைக்கு ரூ.3 லட்சம் வரை கிடைக்கும்.
பெங்களூரில் 2 பெட்ரூம் வீட்டிற்கு மாத வாடகை ரூ.60,000 முதல் ரூ.70,000 வருகிறது. இதை தவிர வீட்டில் பணி புரியும் சமையல்காரர்களுக்கு சம்பளம், மளிகை சாமான்கள், ஜிம் போன்றவற்றுக்கும் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது.

பணிக்கு செல்பவர்கள் போக்குவரத்து மற்றும் ஷாப்பிங் ஆகியவற்றுக்காக மட்டும் ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.3 லட்சம் வரை செலவு செய்கின்றனர். கார் வாங்கினால் அதற்கு மாதா மாதம் ரூ.50,000 வரை ஈஎம்ஐ செலுத்த வேண்டும்.
குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கான கல்விச் செலவு என அனைத்திற்கும் செலவு செய்த பிறகு சேமிப்பு, முதலீடு ஆகியவற்றுக்கு வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே மீதமிருக்கும். இதனால் சொந்த வீடு வாங்குவது கனவாகவே உள்ளது.
பெங்களூரில் ரியல் எஸ்டேட் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ரூ.3 கோடி என்ற விலையில் விற்பனை செய்யப்படும் வீடுகள் எதிர்காலத்தில் ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை உயரும் வாய்ப்புள்ளது.
நீங்கள் சிறுக சிறுக சேமித்தாலும் பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை ஒரு வீட்டை வாங்குவது சிரமம் தான் என்று கூறி போஸ்ட் செய்திருந்தார். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் பலருடைய வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பெங்களூரை போன்ற நகரங்களில் ஒரு கப் காபி குடிக்க ரூ.250 முதல் ரூ.350 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இப்படி இருக்கையில் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் சேர்ப்பது கடினம்.
டயர் 1 நகரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் டயர் 3 நகரங்களுக்கு மாறுவது குறித்து பரிசீலிக்கலாம். தூரத்தில் இருந்து கொண்டே ரிமோட் ஜாப் செய்து வந்தாலோ அல்லது சொந்தமாக தொழில் தொடங்கினாலோ இது போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று அன்மோல் யோசனை கொடுத்திருந்தார்.
அவருடைய வீடியோவுக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கினர். அதில் ஒரு பயனர், “நான் பல ஆண்டுகளாக ரிமோட் ஜாப் செய்து வருகிறேன். எனக்கு டிராபிக் பிரச்சினையில்லை. குறைந்த செலவிலேயே வாழ்க்கை நடத்துகிறேன். எனவே உங்களால் முடிந்தால் நீங்களும் ரிமோட் ஜாப் செய்ய தொடங்குங்கள்”, என்று பதிவிட்டு இருந்தார்.மற்றொரு பயனர் நான் கூர்கானில் வாழ்கிறேன். வாழ்க்கை ஒன்றும் நீங்கள் சொல்வதைப் போல கடினமானது இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. சம்பளம் அதிகரிக்கும் போது சிலர் தங்களுடைய செலவுகளையும் அதிகரித்துக் கொள்கின்றனர். இதனால் அதிக சம்பளம் பெறுபவர்களாலும் பெரு நகரங்களில் சேமிக்க முடியவில்லை. இவர் விடீயோவைப் பார்த்த பிறகு சிலர் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்து கொண்டு வாழ்ந்தால் எப்பேர்பட்ட சூழலையும் கடந்து விடலாம் என்ற கருத்தையும் முன்வைத்து வருகின்றனர்.

