Last Updated:
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மார்ச் 19-ஆம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளனர். ரஷ்ய வீரர் அலெக்ஸி ஓவ்சினின்-னிடம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சுனிதா ஒப்படைத்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வரும் 19- ஆம் தேதி பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி நிலையத்தை இயக்கும் பணியை ரஷ்ய வீரரிடம் ஒப்படைத்தார்.
10 நாள் பணிக்காக விண்வெளிக்கு சென்று 9 மாதங்களுக்கு மேலாக சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அடுத்த வாரத்தில் பூமி திருப்ப உள்ளதாக அறிவித்துள்ளது நாசா. நாசாவின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளார் சுனிதா வில்லியம்ஸ். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஆண்டு ஜுன் 5ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர். மனிதர்களுடன் சென்ற போயிங்கின் முதல் விண்கலம் இதுவாகும்.
வழக்கமான பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு விண்கலம் எவ்வாறு செயல்படும் என்பதை கவனிப்பதற்கான சோதனை ஓட்டமாக இது அமைந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அருகில் சென்றபோது அதனை வழிநடத்தும் ஐந்து உந்துவிசை அமைப்புகள் செயலிழந்தன. அதிலிருந்த ஹீலியமும் தீர்ந்து போனது. இதையடுத்து, அந்த விண்கலம் ஆளில்லாமல் பூமி திரும்பியது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் இருவரையும் மீண்டும் பூமிக்கு அழைத்துவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவை பலனளிக்கவில்லை.
பின்னர், நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோர்புனோவ் ஆகியோர் இருவரையும் அழைத்து வர SpaceX Crew-9 mission-னில் விண்வெளி சென்றனர். எனினும் பல தாமதங்களுக்கு பிறகு, நான்கு பேரும் மார்ச் 19- ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் பூமி திரும்பும் தேதியை நாசா அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், 19- ஆம் பூமிக்கு திரும்ப உள்ளதாக புட்ச் வில்மோர் கூறியுள்ளார்.
இதனிடையே, ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவ்சினின்-னிடம் சர்வதேச விண்வெளி நிலையத்தை இயக்கும் பணியை சுனிதா வில்லியம்ஸ் ஒப்படைத்தார். அப்போது மிகவும் உணர்வசப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தன்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
சுனிதா வில்லியம்சும் புட்ச் வில்மோரும் பூமிக்கு திரும்பிய பின், சர்வதேச விண்வெளி நிலையத்தை SpaceX Crew-10 mission, ஏற்றுக்கொள்ளும். இதற்காக வரும் 13- ஆம் தேதி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுப்படுகிறது. இந்த ராக்கெட்டில் நான்கு விண்வெளி வீரர்கள் பயணிக்க உள்ளனர்.
March 11, 2025 8:49 AM IST
பூமி திரும்பும் முன் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்தில் செய்த உணர்ச்சிப்பூர்வ செயல்