பி.ஆர். ராஜன்
யுஐடிஎம் எனப்படும் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (யூனிவர்சிட்டி டெக்னோலோஜி மாரா) அதன் கதவுகளை பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்குத் திறந்திட வேண்டும் என்று பூமிபுத்ரா அல்லாதவர்கள் யாரும் கேட்கவும் இல்லை, வற்புறுத்தவும் இல்லை.
இந்த நிலையில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் முகமட் அக்மால் சாலே யுஐடிஎம் பல்கலைக்கழகத்தை தொந்தரவு செய்யாதீர்கள் என்று எச்சரித்திருக்கிறார். அவர் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தைகளை விட்டுக் கொண்டிருக்கிறார். அண்மைக் காலமாக இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி வருகிறார்.
அண்மையில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு யுஐடிஎம் அதன் கதவுகளை திறப்பதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அப்பல்கலைக்கழக மாணவர்கள் கறுப்பு உடை அணிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


யுஐடிஎம் முழுக்க முழுக்க பூமிபுத்ரா உரிமைப் பெற்றது. அதனை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. அந்த தைரியமும் யாருக்கும் இருக்கக்கூடாது என்று டாக்டர் அக்மால் அண்மையில் மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், உண்மை நிலையில் யுஐடிஎம் அதன் கதவுகளை பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு திறந்திட வேண்டும் என்று யார் வேண்டுகோள் விடுத்தது? பூமிபுத்ரா அல்லாத இந்தியர்கள், சீனர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்தனரா?
அரசாங்கம் யுஐடிஎம் பல்கலைக்கழகத்தை பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கும் திறந்துவிட வேண்டும் என்று பூமிபுத்ரா அல்லாதவர்கள் வலியுறுத்தினரா?
பூமிபுத்ரா அல்லாதார் தரப்பிலிருந்து ஒரு கோரிக்கைக் கூட அரசாங்கத்திடம் இதன் தொடர்பில் முன்வைக்கப்படவில்லை என்பதுதான் அசைக்க முடியாத உண்மையாகும். பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை யார் முன்வைத்தது?


யுஐடிஎம்–ஐஜேஎன் கல்வி ஒத்துழைப்பு வாரிய உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ராஜா அமின் ராஜா மொக்தார் என்பவர்தான் முதன் முதலாக இவ்வாறான ஒரு பரிந்துரையை முன்வைத்தவர் ஆவார்.
இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்திய அவர், இதே போன்ற ஒரு கல்வித் திட்டத்தை மலாயா பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் வரையில் தற்காலிகமாக யுஐடிஎம் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என்று கூறியிருந்தார்.
நாட்டில் இருதயம் – நுரையீரல் துறையில் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பற்றாக் குறையைச் சமாளிப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். அரசாங்கத்திற்கு அவர் இதனை ஒரு பரிந்துரையாக மட்டுமே முன்வைத்தார் என்பதை டாக்டர் அக்மால் நினைவில் கொள்ளவேண்டும்.
நாட்டில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருதய நோய்க்கு ஆளாகின்றனர். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நாட்டின் மருத்துவத் துறையில் இருதய அறுவைச் சிகிச்சை முதன்மை பெற்றதாகத் திகழ்கிறது. ஒவ்வொரு நோயாளியையும் நிபுணத்துவத்துடன் கவனித்து சிகிச்சை அளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு வருகிறது. இத்துறை சார்ந்த நிபுணர்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றனர்.
இவ்விவகாரத்தை அரசியலாக்காமல் நாடு, மக்கள் நலனுக்கு முன்னுரிமை தந்து இப்பரிந்துரையை பரிசீலனை செய்ய வேண்டுமே தவிர அதனை இன ரீதியில் அணுகி பிரச்சினையை சிக்கலாக்கக்கூடாது. நாட்டில் அதிகமான மருத்துவர்கள் நிபுணத்துவக் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் வெளிநாடு செல்லும்போது நிபுணத்துவம் மிக்க மனித வளம் வெளிநாடுகளுக்கே சென்று விடுகின்ற நிலையில் நம் நாட்டில் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணமாகவும் அமைந்துவிடுகிறது.
இருதயம், நுரையீரல் ரத்த தமனிகள் சிகிச்சைக்கு போதுமான எண்ணிக்கையில் நிபுணர்கள் இல்லை. மருத்துவத் துறையில் சிறந்த ஆற்றல் இருந்தும் நிபுணத்துவ படிப்புக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கும் பூமிபுத்ரா அல்லாத மருத்துவர்களுக்கு யுஐடிஎம் வாய்ப்பளிக்க வேண்டும். அதுவும் இது ஒரு தற்காலிக நடவடிக்கைதான் என்று தெளிவுபடுத்தப்பட்ட பின்னரும் மிரட்டல் பாணியில் பேசுவது மலாக்கா மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினரும் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினருமான டாக்டர் அக்மாலுக்கு அழகல்ல.


மடானி அரசாங்கத்தில் இவர் சார்ந்திருக்கும் அம்னோவும் உறுப்பு கட்சியாக இடம் பெற்றிருக்கும் நிலையில் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் பிரச்சினைகளை அணுக வேண்டும். பூமிபுத்ரா அல்லாதவர்கள் இந்த விவகாரத்தை எழுப்பவே இல்லை, கோரிக்கையும் வைக்கவில்லை.
எனவே, இந்த விவகாரத்திற்கு பூமிபுத்ரா அல்லாதவர்களே காரணம் என்ற தோரணையில் அவர் இந்தப் பிரச்சினையை அணுகுவது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்யும் என்பதை அவர் உணர வேண்டும்.
இதனிடையே, பூமிபுத்ரா அல்லாத மருத்துவர்களுக்கு யுஐடிஎம் பல்கலைக்கழகத்தில் இருதயம்– நுரையீரல் துறையில் நிபுணத்துவப் பயிற்சிக்கு வாய்ப்பளிக்கப்படுவது குறித்து இதுவரை அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்பதை உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிர் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.


அதேசமயத்தில் யுஐடிஎம் பல்கலைக்கழகம் பூமிபுத்ராவுக்கானது என்பதில் உறுதியாக இருக்கிறது. இக்கடப்பாட்டிலிருந்து அது ஒருபோதும் விலகாது என்பதை டத்தோஸ்ரீ ஸம்ரி உறுதியளித்திருக்கிறார். இவரும் அம்னோவைச் சேர்ந்தவர்தான் என்பதை டாக்டர் அக்மால் சாலே புரிந்துகொள்ள வேண்டும்.
கிட்டத்தட்ட 80 உலக முஸ்லிம் நாடுகளிலிருந்து மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகின்றனர் என்று தெரியவருகிறது.


