Last Updated:
சுனிதா வில்லியம்ஸ் 9 மாத விண்வெளிப் பயணத்திற்குப் பின் பூமிக்கு திரும்பியபோது உடல் மற்றும் மன ரீதியான பல பாதிப்புகளை எதிர்கொள்ளலாம் என மருத்துவர் ஜிம்மி பிரபாகர் தெரிவித்தார்.
ஒன்பது மாத விண்வெளிப் பயணத்திற்கு பின் பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள உள்ளதாக பொது மருத்துவர் ஜிம்மி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பொது மருத்துவர் ஜிம்மி பிரபாகர் அளித்த சிறப்புப் பேட்டியில், 9 மாதங்களுக்குப் பின் பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரால் அடுத்த சில மாதங்களுக்கு சாதாரண மனிதர்கள் போல் நடக்க மற்றும் நிற்க முடியாது எனத் தெரிவித்தார்.
ரத்த அழுத்த மாறுபாட்டால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் எனத் தெரிவித்தார். பார்வைக் குறைபாடு, சிறுநீரகக் கோளாறு பிரச்சினைகளையும் சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ளக் கூடும் என மருத்துவர் ஜிம்மி பிரபாகர் கூறினார்.
புவி ஈர்ப்பு விசை இருப்பதால் மட்டுமே பூமியில் நம்மால் நடமாட முடிகிறது. ஆனால் இது போன்ற புவியீர்ப்பு விசை வேறு எந்த கிரகத்திலும் கிடையாது. விண்வெளியில் ஒன்பது மாதங்கள் அவர் இருந்த நிலையில், புவியீர்ப்பு விசை இல்லாததால் அந்தரத்தில் பறந்தவாறே அவர் இருந்தார்.
அதனால் அவர் பூமியில் கால்களை ஊன்ற முடியாத சூழல் இருந்தது. நடக்க முடியாத சூழல் இருந்தது. இதனால் அவரது எலும்பு மற்றும் தசைகளில் செயல்பாடுகள் குறைந்திருக்கும். இதனால் அவர் வந்தவுடன் நடப்பதற்கும் நிற்பதற்குமே சிரமப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் ரத்த அழுத்த மாறுபாடுகளும் ஏற்படுவதால் உடல்நிலையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
மூளையின் அழுத்தத்தில் மாறுபாடுகள் ஏற்படுவதால் பார்வைக் குறைபாடுகளும், சிறுநீரகம், உணவு எடுத்துக் கொள்வதில் பிரச்சனை போன்றவைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
March 19, 2025 6:37 AM IST


