Last Updated:
Pattarai Karuvadu: பட்டறை கருவாட்டின் தனித்துவமான தயாரிப்பு முறையால் இதன் சுவையும் தனித்துவமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பட்டறை கருவாடு என்பது முன்னோர்கள் கருவாடு உற்பத்தி செய்து வந்த தனித்துவமான முறைகளில் இதுவும் ஒன்றாகும். பொதுவாக வெயிலில் மீனைக் காயவைத்து கருவாடு தயாரிப்பதைத் தான் பார்த்திருப்போம்.
ஆனால், பட்டறை கருவாடு என்பது மீனில் உப்பு, மஞ்சள் தூள் தடவி பனை ஓலைப் பாய் மற்றும் தேங்காய் நார் சாக்கு வைத்து பூமிக்குள் அதாவது மண்ணில் குழி தோண்டி 10 முதல் 15 நாட்கள் வைத்து, தயார் செய்து தயார் செய்யப்படுவது ஆகும். இதன் தனித்துவமான தயாரிப்பு முறையால் இதன் சுவையும் தனித்துவமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பட்டறை கருவாடு செய்யும் முறை: 5 கிலோ முதல் 15 கிலோ எடை உடைய சீலா மீனில் தான் பட்டறை கருவாடு தயார் செய்யப்படுகிறது. சீலா மீனை வாங்கி முதுகு பகுதியைத் தலை முதல் வால் வரை கீறி உடலுக்குள்ள குடல் மற்றும் தேவையற்ற அனைத்தையும் எடுக்க வேண்டும்.
அதன்பின் இரண்டு அல்லது மூன்று முறை நீரில் மீனை நன்றாகக் கழுவி உப்பு மற்றும் மஞ்சள் தூளை மீன் முழுவதும் கொட்டிப் பரப்ப வேண்டும். இதன் பின் மீனின் மேல் தோல் பகுதி முழுவதையும் மஞ்சள் உப்பு ஆகியவற்றை நன்றாகத் தடவி சற்று உலர வைக்கவும்.
தேங்காய் நார் சாக்கு மற்றும் பனை ஓலைப் பாய் எடுத்துக் கொண்டு முதலில் பனை ஓலைப் பாயை வைத்து மூடவும். இதன்பின் தேங்காய் நார் சாக்கினை சுற்று மண் புகாத வலையில் கயிறு மூலம் கட்டிக் கொள்ளவும். தேங்காய் நார் சாக்கு மீனில் உள்ள ஈரப்பதத்தை எடுத்து கருவாடாக மாற்ற எளிதாக இருக்கும்.
மூன்று அடிக்கு மேல் குழியைத் தோண்டி கருவாட்டினை வைத்து குழியினை மூடிவிட்டு 10 முதல் 15 நாட்கள் கழித்து எடுத்தால் மஞ்சளின் கமகம மணத்துடன் பட்டறை கருவாடு ரெடியாகி விடும். வெயிலில் காய வைத்து எடுப்பதை விட மண் குழிக்குள் வைத்து எடுப்பதற்குச் சுவை கூடுதலாக இருக்கும்.
இதன்பின் துண்டுத் துண்டாக வெட்டி மஞ்சள் தடவி அரை கிலோ முதல் விற்பனை செய்யப்படுகிறது. பேருந்துகளில் கருவாடு மணம் வந்தால் சில நேரங்களில் ஏற்றுவது கிடையாது. இதனால் பாக்ஸில் போட்டு அதன் மணம் வெளியில் வராமல் இருக்கவும், அழகிற்காகவும் கருவேப்பிலை வைத்து ஆர்டர்களுக்கு அனுப்பப்படுகிறது.
இதனை தண்ணீர் படாமல் வைத்திருந்தால் நீண்ட காலத்திற்கு நன்றாக இருக்கும். அவ்வப்போது வெயிலில் காயவைத்து எடுத்து சமைக்கப் பயன்படுத்திக் கொள்ளவும்.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சீலா மீன் வாங்கும்போது அந்த விசைப்படகு மீனவர்களிடம் ஐஸ்கட்டி வைக்காமல் மீனைக் கரைக்குக் கொண்டு வரச் சொல்ல வேண்டும். ஐஸ்கட்டி வைத்து மீனில் பட்டறை கருவாடு செய்தால் எதிர்பார்த்த சுவை நன்றாக இருக்காது எனக் கூறப்படுகிறது.
Ramanathapuram,Tamil Nadu
Pattarai Karuvadu: பூமிக்குள் புதைத்து வைத்த பொக்கிஷம்… தரமான பட்டறை கருவாடு தயாராவது இப்படித்தான்…

