Last Updated:
பூனையை வைத்து நடந்த அத்துமீறல் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள சிறைச் சாலையில் பூனை மூலம் நடந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில இடங்களில் விலங்குகளை வைத்து பணம் உள்ளிட்ட பொருட்களை திருட வைக்கும் சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்தவகையில், கோஸ்டா ரிகா நாட்டில் பூனையை வைத்து நடந்த அத்துமீறல் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நாட்டின் போகோசி நகரில் சிறைச்சாலை உள்ளது. அந்த சிறைச்சாலையை சுற்றி பாதுகாப்பு காரணங்களுக்காக அதிநவீன கம்பி வலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த சிறைச்சாலையில், பூனை ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வெகுநேரமாக அமர்ந்திருந்தது. மேலும் பூனை மீது விநோதமான பொருள் இருந்ததை பாதுகாப்பு படையினர் கவனித்தனர்.
இந்நிலையில், அந்த பூனைக்கு அருகில் சென்ற பாதுகாப்பு படையினர் சாதுரியமாக செயல்பட்டு அதனை மீட்டனர். அப்போது பூனையின் உடலில் ஒட்டப்பட்டிருந்த இரண்டு பாக்கெட்டுகளை பிரித்துப் பார்த்தனர். இதில், 235 கிராம் கஞ்சா, 67 கிராம் ஹெராயின் ஆகிய போதைப் பொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து பூனையை பயன்படுத்தி சிறைக் கைதிகளுக்கு போதைப் பொருட்களை அனுப்பி வைத்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பூனையை மீட்டு கால்நடைகளுக்கான பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர். பூனையின் நடமாட்டம் குறித்து சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
May 20, 2025 12:27 PM IST
பூனையின் உடலில் இருந்த விநோத பொருள்… சிறைச்சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… பரபரப்பு பின்னணி!


