Last Updated:
ஆந்திரப்பிரதேசம் விழியநகரம் மாவட்டத்தில் பூட்டியிருந்த காரில் மூச்சுத்திணறி 4 சிறுவர், சிறுமியர் உயிரிழந்த சம்பவம் துவாரபூடி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலம், விழியநகரம் மாவட்டத்தில் பூட்டியிருந்த காரில் விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர், சிறுமியர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழியநகரம் மாவட்டம், துவாரபூடி கிராமத்தைச் சேர்ந்த 8 வயதான உதய், சாருமதி, 6 வயதான சரிஷ்மா, மனஸ்வி ஆகிய நான்கு பேரும் விளையாடச் செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர்.
நீண்ட நேரம் ஆகியும் நான்கு பேரும் வீடு திரும்பாததால், அவர்களது பெற்றோர்கள் வீட்டின் அருகே தேடியபோது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் நான்கு பேரும் மயங்கிக் கிடந்துள்ளனர்.
இதையடுத்து கார் கண்ணாடியை உடைத்து நான்கு பேரையும் மீட்ட பெற்றோர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு நான்கு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்..
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சாருமதி, சரிஷ்மா ஆகியோர் சகோதரிகள் ஆவர். பூட்டியிருந்த காரில் மூச்சுத்திணறி 4 சிறுவர், சிறுமியர் உயிரிழந்த சம்பவம் துவாரபூடி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
May 19, 2025 11:38 AM IST


