ஹட்டன், சைட் வீதியிலுள்ள (Side Road) பல வியாபார நிலையங்களில் ஒரே இரவில் அடுத்தடுத்து இடம்பெற்றத் துணிகரக் கொள்ளைச் சம்பவங்கள் அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
நேற்று (24) சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவங்களின் போது, பூட்டப்பட்டிருந்த பல கடைகளின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் அங்கிருந்த பல்வேறு பெறுமதிமிக்க பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிசிடிவி கேமராவில் சிக்கிய முகம்: இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் தனி நபர் ஒருவர் ஈடுபட்டாரா அல்லது ஏதேனும் கும்பல் பின்னணியில் உள்ளதா என்பது தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதனிடையே, கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரின் தெளிவான முகம், அப்பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு: ஹட்டன் வலயப் பொலிஸ் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகரவின் நேரடிப் பணிப்புரைக்கு அமைவாக, ஹட்டன் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயவியல் சான்றுகளையும் கைவிரல் அடையாளங்களையும் சேகரித்துள்ளனர்.
அத்துடன், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வரும் பொலிஸார், கேமராவில் பதிவாகியுள்ள சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காகப் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

