தற்போது அமலுக்கு வரவுள்ள புதிய விதிகளின்படி, புற்றுநோய் மருந்துகளின் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் விதிக்கும் லாப வரம்பு, அம்மருந்தின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் 30 சதவீதத்திற்கு மிகாமல் கட்டுப்படுத்தப்படும்.
தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருந்துகள் ஏற்கனவே கடுமையான அரசுக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அப்பட்டியலில் இடம்பெறாத புற்றுநோய் மருந்துகளுக்கும் விலை பாதுகாப்பை நீட்டிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, இந்த வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டிய மருந்துகளின் பட்டியலை இறுதி செய்த பின்னர், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் சுமார் 60 பேர் பாதிக்கப்படும் வகையில் நாட்டில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சந்தை நிலவரம் குறித்த என்பிபிஏ-வின் ஆய்வில், விலைக்கட்டுப்பாட்டுப் பட்டியலில் இல்லாத மருந்துகளின் விலையில் சராசரியாக சுமார் 170% கூடுதல் கட்டணம் சேர்க்கப்படுவது தெரியவந்துள்ளது. சில நேரங்களில் இது 700% அல்லது அதற்கும் அதிகமாகவும் உள்ளது. சில்லறை மருந்தகம், மருத்துவமனை மருந்தகம், இணையவழி மருந்தகம் ஆகியவற்றில் எங்கு வாங்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து மருந்துகளின் விலைகளில் கணிசமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இத்தகைய அதிக லாப வரம்புகள், விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகளில், நோயாளிகளின் சிகிச்சைச் செலவுகளைப் பெருமளவில் அதிகரிக்கின்றன. இந்தப் புதிய உச்சவரம்பு, அதீத லாப நோக்காத்தைக் கட்டுப்படுத்தி, சந்தையில் நிலவும் நியாயமற்ற விலை நிர்ணய நடைமுறைகளைச் சரிசெய்து, நோயாளிகளுக்கு நியாயமான விலைகளை உறுதிசெய்ய உதவும் என மத்திய அரசின் மருந்துகள் துறை தெரிவித்துள்ளதது.
முன்னதாக, 2019 பிப்ரவரியில், அரசின் உத்தரவின் பேரில், பட்டியலிடப்படாத 42 புற்றுநோய் மருந்துகளுக்கான வர்த்தக வரம்புகளை என்பிபிஏ நிர்ணயம் செய்தது. இந்த முடிவின் மூலம் அதிகபட்ச சில்லறை விலைகள் 91% வரை குறைக்கப்பட்டன. இதன் விளைவாக 526 மருந்து வகைகளில் ஆண்டுக்கு ரூ. 984 கோடி சேமிப்பு ஏற்பட்டது. அந்த அனுபவத்தின் அடிப்படையில், விநியோகச் சங்கிலியில் கண்டறியப்பட்ட விலை நிர்ணயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், அரசு இப்போது விரிவான விலை உச்சவரம்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உயிர்காக்கும் இந்த மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய, பட்டியலில் இணைக்கப்படாத புற்றுநோய் மருந்துகளைத் தயாரிப்பவர்கள் தங்களது தற்போதைய உற்பத்தி அளவைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த நடவடிக்கை, பிராண்டட், உயிர் காக்கும் மருந்துகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, இறக்குமதி செய்யப்பட்டவை, காப்புரிமை பெற்றவை மற்றும் பெறாதவை எனப் பல்வேறு வகைகளைச் சேர்ந்த, பட்டியலிடப்படாத மருந்துகளை உள்ளடக்கியிருக்கும் என்றும் அரசு தெரிவித்துளளது.

