Last Updated:
கட்டுக்கடங்காத கூட்டத்தின் அழுத்தம் காரணமாக, தேரின் அருகே நின்றுகொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது
ஒரிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 120 பேர் மூச்சு திணறால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஒடிசா மாநிலம் புரியில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் வருடாந்திர ரத யாத்திரை இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பக்தர்கள் புரியின் பிரதான சாலையான ‘படா தண்டா’ (Grand Road) பகுதியில் திரண்டனர்.
தேர்கள் புறப்பட்ட தருணத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு முன்னேற முயன்றதால், ரத வீதியில் கடுமையான கூட்ட நெரிசலும் குழப்பமும் நிலவியது.
கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தின் அழுத்தம் மற்றும் கடுமையான புழுக்கம் காரணமாக, தேரின் அருகே நின்றுகொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயங்கி விழுந்தனர். அங்கிருந்த சிறப்பு மீட்புக் குழுவினர் (SRU) மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களைக் கூட்டத்திலிருந்து மீட்டு அவசர சிகிச்சைக்காகப் புரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு (DHH) மாற்றினர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே, கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்த பக்தர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இந்த உயிரிழப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
புரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 120 பேர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதி; ஒருவர் பலி எனத் தகவல்!


