புகழ்பெற்ற ரத யாத்திரை!
ஒடிசா மாநிலம், புரியில் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஜெகந்நாதா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை மிகவும் புகழ்பெற்றதாகும். நிகழாண்டு ரத யாத்திரை வெள்ளிக்கிழமை மிக விமா்சையாகத் தொடங்கியது.
மிகுந்த கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்ட மூன்று பிரம்மாண்ட ரதங்களில், ஜெகந்நாதா், அவரது அண்ணன் பலபத்திரா், தங்கை தேவி சுபத்திரை ஆகிய மூவரின் மரச்சிற்பங்கள், கோயிலில் இருந்து வேத மந்திரங்கள்-மேளதாளங்கள்-சங்கொலி முழங்க வெளியே எடுத்துவரப்பட்டு, அமர்த்தப்பட்டன.
முதலாவதாக பலபத்திரா் ரதமும், அடுத்ததாக தேவி சுபத்திரையின் ரதமும், இறுதியாக ஜெகந்நாதரின் ரதமும் பக்தா்களால் இழுக்கப்பட்டு, புறப்பாடாகின. இந்த நிகழ்வில், இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ரதத்தை இழுத்தனர்.
ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவைக்காண ஸ்ரீகுந்திச்சா கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடியுள்ளனர். ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோயிலுக்கு இழுத்துவரப்படும்.
எனினும், வெள்ளிக்கிழமை நேரிட்ட கூட்ட நெரிசலால் ரத யாத்திரை நேற்று நிறுத்தப்பட்டு, இன்று காலை மீண்டும் தொடங்கியிருக்கிறது.

