(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
புக்கிட் பத்து சட்டமன்றத் தொகுதியில் வீசிய பலத்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த புக்கிட் பத்து தொகுதித் தேசிய முன்னணி–ம.இ.கா. வேட்பாளரும், வேட்பாளர் எண் 1-ஆக போட்டியிடும் ஆர். குமரன், மக்களின் சிரமங்களை தேர்தல் கால அரசியலாக அல்லாமல் உடனடி நடவடிக்கை தேவைப்படும் மனிதாபிமானப் பிரச்சினையாக அணுக வேண்டும் என்று தெரிவித்தார்.
புக்கிட் பத்து பெல்டா பகுதியில் புயல் வீசியதாக மாலை நேரத்தில் குடியிருப்பாளர்களிடமிருந்து தகவல் கிடைத்தவுடன், தமது குழுவினருடன் சம்பவ இடத்திற்குச் சென்றதாக அவர் கூறினார்.


அங்கு பல மரங்கள் வேரோடு சாய்ந்திருந்ததோடு, பல வீடுகளின் கூரைகள் பறந்திருந்தன. சில வீடுகளில் மழைநீர் கசிவு ஏற்பட்டிருந்தது. மேலும், பள்ளிவாசல், சமூக மண்டப மேடை, கெமாஸ் பாலர் பள்ளி கட்டிடம், GPW கட்டிடம் உள்ளிட்ட பொது வசதிகளும் சேதமடைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆரம்பத் தகவலின்படி, 20-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவாக தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்தச் சோதனையை எதிர்கொள்ள அனைவருக்கும் மனவலிமை கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
அதேவேளை, பேரிடர் நேரங்களில் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
குமரன், இதற்கு முன்பு உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவமும், ஜோகூர் மாநில ம.இ.கா. செயலாளராக நீண்டகாலமாக களப்பணியில் ஈடுபட்டு வருவதாலும், தொகுதியின் பல பகுதிகளில் மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்.


அண்மைய நாட்களில் நடைபெற்ற அவரது வீடு வீடாகச் சந்திக்கும் பிரசாரம், சமூக அமைப்புகளுடனான கலந்துரையாடல்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் இந்திய சமூகத்தினருடனான சந்திப்புகள் ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக அவரது தேர்தல் குழு சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது.
தமது தேர்தல் பரப்புரையில் பேசிய குமரன், ஜோகூர் மாநிலம் கடந்த நான்கு ஆண்டுகளில் முதலீடுகள், வேலைவாய்ப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.
“மாஜூ ஜோகூர் என்ற வளர்ச்சி நோக்கத்தை நாம் தொடர வேண்டுமா, அல்லது மீண்டும் உறுதியற்ற அரசியல் சூழலுக்குச் செல்ல வேண்டுமா என்பதை வாக்காளர்களே தீர்மானிக்க வேண்டும். இந்தத் தேர்தல் ஒரு வேட்பாளரை மட்டும் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அல்ல; ஜோகூரின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதையைத் தேர்வு செய்யும் தேர்தல்,” என்றார்.


ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தலைமையில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், புதிய முதலீடுகள் மூலம் உயர்ந்த வருமானம் தரும் வேலைவாய்ப்புகள் உருவாகி, மாநிலத்தின் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்திய சமூகத்தினரும் “பங்சா ஜோகூர்” என்ற ஒரே குடும்பத்தின் அங்கமாக இருந்து மாநில முன்னேற்றத்தில் தொடர்ந்து பங்களித்து வருவதாகக் கூறிய அவர், இந்தியர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களும் ஜூலை 11ஆம் தேதி கட்டாயம் வாக்களிக்க வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“உங்கள் ஒரு வாக்கு ஜோகூரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். நீல நிறச் சின்னமான தேசிய முன்னணிக்கு வாக்களித்து, மாஜூ ஜோகூர்என்ற வளர்ச்சிப் பயணத்தைத் தொடர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று குமரன் வலியுறுத்தினார்.



