Last Updated:
பும்ரா அணியில் இருக்கும்போது, எந்த வீரருக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்குவார்
இந்திய அணியில் பும்ரா இல்லாத சூழலில் தான் சிறப்பாக செயல்பட்டது குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த தொடரில் பும்ரா 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் . அவர் அணியில் இல்லாத சூழலில் முகமது சிராஜ் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு பலம் சேர்த்தார்.
குறிப்பாக 5 ஆவது டெஸ்ட் போட்டியில் சிராஜின் பவுலிங் அற்புதமாக அமைந்தது. அந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இங்கிலாந்து தொடர் அனுபவம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
எனக்கு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மிகவும் பிடிக்கும். பும்ரா இல்லாதபோது, நான் சீனியர் பந்துவீச்சாளராக கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. இது எனக்கு ஒருவித மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது.
பொறுப்புகள் அதிகரிப்பதால் எனக்கு எந்தவித அழுத்தமும் ஏற்படுவதில்லை. எனது திட்டத்தை எப்போதுமே எளிமையாக வைத்துக் கொள்வேன்.
பும்ரா அணியில் இருக்கும்போது, எந்த வீரருக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்குவார். பும்ரா இல்லாதபோது, அந்தப் பொறுப்பைத் நானே எடுத்துக்கொண்டு செயல்படுத்த விரும்பினேன்.
August 26, 2025 12:08 PM IST


