புனேயில் மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மைனர் சிறுவனை காப்பாற்ற ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றிக் கொடுத்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து குற்றச்சாட்டிலிருந்து சிறுவனை தப்ப வைக்க பணக்கார குடும்பம் அரங்கேற்றி வரும் அடுத்தடுத்த பித்தலாட்ட சம்பவங்கள் என்ன?
மதுபோதை வெறியில் விபத்தை ஏற்படுத்தி உயிரை எடுத்து விட்டு, சட்டத்தை ஏமாற்றி தப்ப முயலும் இத்திரைப்படக் காட்சிகளைப் போன்ற அப்பட்டமான சம்பவம் தான் புனேவில் தற்போது அரங்கேறியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய மைனர் பையன் பணக்கார குடும்பத்தின் வாரிசு என்ற ஒரே காரணத்தால் ஓட்டுநரை பழியை ஏற்க சொல்லி அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி என்ன?
பணம் படைத்த குடும்பத்தினர் என்றால் சட்டத்தை வளைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைதான் நாட்டில் நிலவி வருகிறது. சில நாட்களுக்கு முன் புனேயில் நடந்த போர்ஷே கார் விபத்துக்குப் பின் நடந்த சம்பவங்கள் தான் தற்போது நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே காரை ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி செய்த வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிக்க:
கடந்த முறை இமயம்.. இந்த முறை குமரி.. தேர்தல் ரிசல்ட்டுக்கு முன் பிரதமர் மோடி தியானம்
விபத்து நடைபெற்று 15 மணி நேரத்தில் சிறுவன் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டான். விபத்து குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் சாதாரணமான தண்டனைகள் வழங்கப்பட்டன.
இந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவிய நிலையில், சிறுவனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்தன. அதன்பின்தான் சிறுவன் சிறார் கூர் நோக்கு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். சிறுவனுக்கு கார் கொடுத்த அவரின் தந்தையும் பிரபல பில்டருமான அகர்வாலும் கைது செய்யப்பட்டார்.
பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளரான அகர்வால் சுமார் 600 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு உரிமையாளர் சிறுவனை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் செய்த வேலைகள் ஏராளம். விபத்துக்கு பொறுப்பேற்று சரணடையும்படி தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்து வைத்துள்ளார்.
ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார். இதனிடையே ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றிக்கொடுக்க பில்டர் குடும்பம் தங்களது பணபலத்தை பயன்படுத்திய தகவலும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.புனேயில் உள்ள அரசு மருத்துவமனையான சசூன் மருத்துவமனைக்குத்தான் சிறுவன் ரத்த பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்டான்.
அங்கு தடயவியல் ஆய்வுக்கூடத்தின் தலைவராக இருக்கும் டாக்டர் அஜய் தவாடே, டாக்டர் ஹரி ஹர்னூர் ஆகியோர் சிறுவனின் ரத்த அறிக்கையை மாற்றிக்கொடுத்து மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஏனென்றால் சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் ஏற்கெனவே போலீசாருக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் இரண்டு பேரும் தற்போது குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸாரின் விசாரணையில் டாக்டர் தவாடே விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை அகர்வாலிடம் போனில் பேசி இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியிருப்பது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.
.